‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’
விவசாயிகள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கும் இன்றைய சூழலில், இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை ஒருவர் நினைவூட்டியிருக்கிறார். அவர், காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்திருக்கும் விபாகர் சாஸ்திரி. லால் பகதூர் சாஸ்திரி!
எந்த அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்களோ, விவசாயிகள் மீது எந்த அரசு அடக்குமுறையில் ஈடுபடுகிறதோ, அந்த அரசுக்கு தலைமை தாங்கும் கட்சியில் சேர்ந்த ஒருவர், ‘ஜெய் கிசான்’ என்று முழங்குவதுதான் முரணாக இருக்கிறது. முதன் முதலில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்று முழங்கியவர், இந்திய அரசியலில் எளிமையின் சின்னமாக விளங்கியவரும், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி. அவருடைய பேரன்தான், விபாகர் சாஸ்திரி.
விவசாயிகளின் கோரிக்கைகளையும் பா.ஜ.க அரசு ஏற்காத நிலையிலும், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என்று நினைக்கிறேன்’ என்கிறார் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன். லால் பகதூர் சாஸ்திரியை இழிவுபடுத்தும் செயல், இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது என சாடுகிறார்கள் விவசாயிகள். சரி, அது இருக்கட்டும். நாம், இந்திய தேர்தல் வரலாற்றில் லால் பகதூர் சாஸ்திரி தொடர்பான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். லால் பகதூர் சாஸ்திரி
சுதந்திரப் போராட்ட வீரரான லால் பகதூர் சாஸ்திரி, காந்திய கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு குடியரசு நாடாக இந்தியா உருவானதற்குப் பின்பாக, 1952-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வுசெய்வதற்கான பொறுப்பு லால் பகதூர் சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.
தேர்தல் பிரசாரம் தொடர்பான பணிகளையும் அவரே கவனித்தார். அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்திரி. நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றார் லால் பகதூர் சாஸ்திரி.ரயில் விபத்தும்... ராஜினாமாவும்!
1956-ம் ஆண்டு, ரயில்வே அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தபோது, மகபூப்நகர் ரயில் விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், அவரின் ராஜினாமா கடிதத்தை வாங்க மறுத்துவிட்டார் பிரதமர் நேரு. அடுத்து, இரண்டரை மாதங்கள் கழித்து தமிழ்நாட்டின் அரியலூரில் ஒரு ரயில் விபத்து நிகழ்ந்தது. அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார் லால் பகதூர் சாஸ்திரி. லால் பகதூர் சாஸ்திரி
இந்த முறை அவரது ராஜினாமா கடிதத்தை நேரு ஏற்றுக்கொண்டார். நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடந்த ரயில் விபத்தில், டெல்லியில் இருக்கும் ரயில்வே அமைச்சருக்கு நேரடித் தொடர்பு இல்லை. ஆனாலும், அந்த விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உணர்வு லால் பகதூர் சாஸ்திரி போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அப்போது இருந்திருக்கிறது. 1959-ம் ஆண்டு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும், 1961-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகவும் லால் பகதூர் சாஸ்திரி இருந்தார்.காமராஜரின் தேர்வுலால் பகதூர் சாஸ்திரி
லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா என்பதுதான் அவரது பெற்றோர் வைத்த பெயர். ஸ்ரீவத்சவா என்பது சாதிப் பெயர். எனவே, தன் பெயரில் இருந்த ஸ்ரீவஸ்தவாவை அவர் நீக்கிவிட்டார். எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணகமாக வாழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. மத்திய `Home Minister’ ஆக இருந்த அவருக்கு, சொந்தமாக ஒரு `Home’ இல்லை என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். மத்திய அமைச்சராக இருந்தும், அவருக்கு சொந்த வீடு கிடையாது.
மத்திய அமைச்சராக ஆவதற்கு முன்பு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்துவதற்குப் பதிலாக, அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் முறையை நாட்டில் முதன்முதலாக அவர் கொண்டுவந்தார். பேருந்துகளில் பெண்களை நடத்துநர்களாக முதன்முதலில் நியமித்தவரும் லால் பகதூர் சாஸ்திரிதான்.நேரு தன் மகள் இந்திரா காந்தியுடன்...
அமைச்சர் பதவியை லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்த பிறகு, நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்தார். பிரதமர் நேரு மேற்கொள்ள வேண்டிய பல வேலைகளை எடுத்துச்செய்து, நேருவுக்கு பக்கபலமாக இருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. இந்த நிலையில், 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி பிரதமர் நேரு திடீரென காலமானார். அதனால், இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றார். அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் பதவிக்கு வர மொராஜி தேசாய் விரும்பினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர், அடுத்த பிரதமரைத் தேர்வுசெய்யும் இடத்தில் இருந்தார். மொராஜி தேசாய் போட்டியில் இருந்தாலும், காமராஜரின் தேர்வு லால் பகதூர் சாஸ்திரியாக இருந்தது.
இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்றார். நேரு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் உட்பட பலர் லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையிலும் அமைச்சர்களாகத் தொடர்ந்தனர். ஸ்வரன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இந்திரா காந்தியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், குல்சாரிலால் நந்தாவை உள்துறை அமைச்சராகவும் நியமித்தார் லால் பகதூர் சாஸ்திரி.காமராஜர்வெண்மைப் புரட்சியும்... பசுமைப் புரட்சியும்!
நேருவின் சோசலிச பொருளாதாரக் கொள்கைகளையே லால் பகதூர் சாஸ்திரியும் தொடர்ந்து கடைப்பிடித்தார். இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வெண்மைப் புரட்சியை முன்னெடுத்த பெருமை லால் பகதூர் சாஸ்திரியை சாரும். அவர் பிரதமராக இருந்த காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, தினமும் ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் லால் பகதூர் சாஸ்திரி. ஒருவேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம், அந்த உணவை இன்னொருவருக்கு கிடைக்கச் செய்யலாம் என்ற லால் பகதூர் சாஸ்திரி, அதை முதலில் தன் குடும்பத்தில் அமல்படுத்திவிட்டுத்தான், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் என்பார்கள் அவர் குறித்து அறிந்தவர்கள்.
அவரது வேண்டுகோளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலையில் உணவகங்கள் அடைக்கப்பட்டன. பல குடும்பங்களில் ‘சாஸ்திரி விரதம்’ கடைப்பிடிக்கப்பட்டது. உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட அவர், 1965-ம் ஆண்டு பசுமைப் புரட்சியை ஊக்குவித்தார். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை ரகம் அப்போதுதான் உருவாக்கப்பட்டது.லால்பகதூர் சாஸ்திரி
லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோதுதான், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. உடனே, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை, அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று சாஸ்திரி உறுதியளித்தார். அதன் காரணமாக, இந்தி எதிர்ப்பு போராட்டம் தணிந்தது.லால் பகதூர் சாஸ்திரியும்!இந்தியா பாகிஸ்தான் போரும்
1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இந்தியாவை வழிநடத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி. பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றபோது, இரு நாடுகளிடையே போர் மூண்டு இரு தரப்பிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்காவும் சோவியத் யூனினும் ராஜாங்க ரீதியில் முயற்சிகள் மேற்கொண்டு, ஐ.நா தலையீட்டைத் தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்தப் போரின்போதுதான், ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை லால் பகதூர் சாஸ்திரி எழுப்பினார். அது தேசிய முழக்கமாக மாறியது. லால் பகதூர் சாஸ்திரி மறைவு தொடர்பாக ஆனந்த விகடனில் வெளியான கார்ட்டூன்லால் பகதூர் சாஸ்திரி மறைவு தொடர்பாக ஆனந்த விகடனில் வெளியான கார்ட்டூன்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, தாஷ்கன்ட் பிரகடனத்தில் கையெழுத்திட அன்றைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட்டுக்குச் சென்றிருந்த லால்பகதூர் சாஸ்திரி அங்கு மரணமடைந்தார். 1966-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த இந்திய தேசமும் சோகத்தில் மூழ்கியது. அவரது மரணம் குறித்து மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்றுகூட சொல்லப்படுகிறது. ஆனால், அவரது மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்களின் உடல் அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் நினைவிடத்தில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜெய் கிஷான்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. லால் பகதூர் சாஸ்திரி சிலை
லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றார். அதன் பின்னர் தான், இந்திய அரசியலில் பல அதிரடியான அத்தியாயங்களைப் படைத்த இந்திரா காந்தி, இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.
(தொடரும்..!)
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T45ym0