பவளக்காரத் தெருவில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என பொறித்திருந்த பெயர் பலகையைத் திறந்து வைத்து ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா எழுச்சிரையாற்றி 75 ஆண்டுகள் ஓடிவிட்டன.
திமுகவினர் தங்களின் பவளவிழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த 75 ஆண்டுகளில் திமுக எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது. சறுக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் திமுகவின் 75 ஆண்டுகால வரலாறு என்பது நவீன தமிழ்நாட்டின் வரலாறும் கூட. திமுகவைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் தமிழ்ச் சமூக அரசியல்போக்கைப் பற்றிய விஸ்தாரமான பார்வையும் பெற முடியும். அந்த நம்பிக்கையில்தான் 'Karunanidhi A Life' புத்தகத்தை எழுதியவரும் தி இந்துவின் வாசகர் பகுதியின் எடிட்டராகவும் இருந்தவரான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களைத் தொடர்புகொண்டு உரையாடினேன்.A.S. Panneerselvan
75 ஆண்டுகளை திமுக நிறைவு செய்கிறது. திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17, 1949 அந்த தினத்துக்கு எங்களைக் கொஞ்சம் அழைத்துச் செல்லுங்களேன். அன்றைக்கு திமுக மாதிரியான ஒரு அமைப்பின் தேவை தமிழ்ச்சமூகத்தில் என்னவாக இருந்தது?அண்ணா
இந்தியாவில் இரண்டு வகையான அரசியல் போக்குகள் இருக்கின்றன. ஒன்று, தேசமானது அரசு இயந்திரத்தை மையமாகக் கொண்டு மக்கள் அதனைச் சார்ந்து இருப்பதைப் போன்ற போக்கு. மற்றொன்று மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தை உருவாக்கிக் கொள்வது. 1947 ல் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மக்களைக் காட்டிலும் அரசு இயந்திரம்தான் பெரிது என்கிற பார்வை பொதுபுத்திக்குள் ஊறியிருந்தது. அப்படியொரு காலகட்டத்தில் திமுகதான் அதிகாரத்தை அரசு இயந்திரத்திடமிருந்து எடுத்து மக்களிடமே மாற்றிவிட்ட அமைப்பாக இருந்தது. இந்தப் புள்ளியிலிருந்துதான் திமுகவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மொழி, பண்பாடு, கலாசாரம் என அத்தனை விஷயங்களிலும் பன்முகத்தன்மை என்கிற பாங்கை ஒளித்துவிடாதீர்கள் என்பதுதான் திமுகவின் கொள்கையாக இருந்தது. சுதந்திரத்துக்கும் முதல் பொதுத்தேர்தலுக்கும் இடையில் தோன்றிய கட்சி எனும்போதே நவீன இந்திய அரசியலில் இருக்கக்கூடிய சிக்கல்களைப் பார்த்து எதிர்கொண்டு அதற்கு எதிர்வினையாற்றிய இயக்கமாக திமுக இருந்தது. அரசியல் என்பதை சென்று சேர வேண்டிய இடமாக இல்லாமல் பயணமாகப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது தொடர்ச்சியாக சில சமூக மாற்றங்களை உருவாக்கக்கூடிய வல்லமை திமுகவுக்கு இருந்தது.
ஆட்சிக்கலைப்பு, பெரிய பிளவுகள், அதிகாரமில்லாத நிலை என திமுக பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. அந்தக் காலகட்டங்களை அவர்கள் எவ்வாறு கடந்து வந்தார்கள்?
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எதோவொரு கட்டத்தில் பிளவுகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அத்தனை கட்சிகளுக்குமே இந்த அனுபவம் உண்டு. திமுகவும் மூன்று பெரிய பிளவுகளை எதிர்கொண்டிருக்கிறது. 1961 இல் EVK சம்பத் ஒரு பிளவை ஏற்படுத்தினார். 1972 இல் எம்.ஜி.ஆரும் 1993 இல் வைகோவும் ஒரு பிளவை ஏற்படுத்தினர். இந்த பிளவுகளால் திமுக என்கிற அமைப்பு நொடிந்து போய்விடவில்லை. அவர்களின் அடையாளத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. 1952 இல் கம்யூனிஸ்ட் எப்படியொரு இடத்தில் இருந்தார்கள் என்பதை அசைபோட்டுப் பாருங்கள். பல மாநிலங்களில் அவர்கள்தான் காங்கிரஸூக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தார்கள்.DMK Complete History
ஏன் நீங்கள் காங்கிரஸை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதைய அவர்களின் நிலையையும் இப்போதையை நிலையையும் நம்மால் ஒப்பிடவே முடியாது. கடுமையான செல்வாக்குச் சுருக்கத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்திலிருந்துதான் திமுகவின் வலிமை என்னவென்பதை நாம் உணர வேண்டும். அப்போது எப்படியிருந்தார்களோ இப்போதும் அதே வலிமையோடும் கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார்கள். இதன்வழி காலங்காலமாக அவர்களால் மத்தியில் அதிகாரம் மொத்தமும் குவிவதற்கு எதிரான வலுவான குரலை எழுப்ப முடிந்தது. நீட் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். திமுக அளவுக்கு எந்தக் கட்சி அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் நீட் விலக்கு கொடுத்துவிடுமா திமுகவுக்கு வெற்றி கிடைத்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால், அரசியலில் அனைத்தையும் வெற்றியை வைத்தே அளவிட முடியாது. இங்கே போராட்டம்தான் முக்கியம். எதிர்க்குரல்தான் முக்கியம். வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பாதையை திமுக மாதிரியான அமைப்பால்தான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
1976 ஜனவரி மாதத்திலேயே திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடிக்கிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தமாக 13 ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1967 க்கு முன்பு ஒரு 18 ஆண்டுகள் அதிகாரத்தை நோக்கிய போராட்டத்தில் இருந்தனர். 80 களின் இறுதியில் மீண்டும் ஆட்சி கலைக்கப்படுகிறது. மீண்டும் எதிர்க்கட்சி. இப்போது கூட பாருங்கள், 10 ஆண்டுகள் அதிகாரமே இல்லாமல் இருந்துவிட்டுதான் 2021 இல் ஆட்சியில் அமர்ந்தார்கள். திமுக ஆட்சியில் இல்லாதபோதும் அமைப்புரீதியாக அவர்கள் பெரிய சுணக்கத்தையோ உத்வேகக் குறைவையோ எதிர்கொண்டதே இல்லை. சொல்லப்போனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் இன்னும் வீரியமான கொள்கைப் பிடிப்புடனும் உத்வேகத்துடனும் இருந்திருக்கிறார்கள்.Kalaignar
தமிழகத்தின் வளர்ச்சியில் திமுக ஆட்சியில் அமர்ந்திருந்த காலக்கட்டங்களை பற்றியும் அந்த சமயத்தில் நிகழ்த்தப்பட்ட சமூக - பொருளாதார மாற்றங்களையும் பற்றி பேசியாக வேண்டும். அதைப் பற்றி கொஞ்சம் விவரியுங்களேன்.
ஆட்சியில் அமர்வதன் மூலம்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இடஒதுக்கீட்டை ஆட்சி அதிகாரத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்தினார்கள். இருமொழிக் கொள்கையை, பெண்களுக்கான சொத்துரிமையை, சுயமரியாதைத் திருமணத்தை, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை என எல்லாவற்றையும் ஆட்சி அதிகாரத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்தினார்கள்.
ஆட்சி இருந்ததால்தான் ஒரே சமயத்தில் சமத்துவப்புரத்தையும் டைடல் பார்க்கையும் திமுகவால் யோசிக்க முடிந்தது. யோசித்துப் பாருங்கள் எவ்வளவு பெரிய சிந்தனை இது. டைடல் பார்க்கைக் கட்டிய கட்சிதான் சமத்துவபுரத்தையும் கட்டியிருக்கிறது. சமூகநீதியையும் வளர்ச்சியையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறார்கள். இதுதான் திமுகவின் வெற்றி. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். எளிய மக்களுக்கான தேவைகளை காலத்தின் பரிணாமத்துக்கு ஏற்ப யோசித்திருக்கிறார்கள். நீதிக்கட்சியின் காலத்தில் சில பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஒரு வேளை உணவு என்கிற திட்டம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பரிணமித்து இப்போது மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கும் இடத்தில் வந்து நிற்கிறது. 'Incremental Growth' என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள். எந்தக் கட்டத்திலும் தேக்கமடையவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்றே பயணித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இலவச பள்ளிக் கல்வி என்றார்கள். அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்ததாக உயர்கல்வியில் என்ன செய்யலாம் என சிந்தித்தார்கள். திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
மற்ற மாநிலத்தவர்கள் இலவசங்களை இன்னமும் கிண்டலாகப் பார்க்கும் போக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் 1991 க்குப் பிறகான தரவுகளை எடுத்துப் பாருங்கள். உலகமயமாக்கலுக்குப் பிறகு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டி தமிழகத்தைதான் தேடி வந்தன. அதற்கு திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக செய்து வைத்திருந்த சமூக முதலீடுதான் காரணம். மற்ற மாநிலங்கள் வீண் விரயமாகப் பார்க்கும் விஷயங்களை திமுக தமிழகத்தில் சமூக முதலீடாகப் பார்த்தது. அதுதான் இந்த மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. பரந்து விரிந்த சாலைகளை அமைப்பது, விண்ணுயர கட்டடங்களைக் கட்டுவது போன்ற கட்டமைப்புரீதியான வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி இல்லை என்கிற புரிதல் திமுகவுக்கு இருந்தது. பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி சமூக ரீதியான வளர்ச்சி என அனைத்தையும் கண்ணிகளால் பிணைக்கப்பட்ட சங்கிலியாக திமுக பார்த்தது. 1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தைக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. அரசு இயந்திரத்துக்கும் சந்தைக்கும் சமநிலை இல்லையென்றால் நிறைய பேர் அடிவாங்குவார்கள் என்பதைப் புரிய வைத்தது தமிழ்நாட்டு மாடல்தான்.தமிழ்நாடு அரசு
1967 க்குப் பிறகு இங்கே ஒரு தேசிய கட்சியால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளும் திராவிடக் கட்சிகளைச் சார்ந்தே இருக்கின்றன. மக்களின் மனநிலையில் இந்த இயக்கம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
தங்களுடைய தலைமை தங்களுக்கானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். போயஸ்கார்டனையோ அறிவாலயத்தையோ நம்முடைய மக்களால் எட்டிவிட முடியும். ஆனால், டெல்லியின் அசோகா தெரு நம் மக்கள் எட்டும் தூரத்தில் இல்லை. எங்களின் தலைமை எங்களிடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம். இதை நீங்கள் ஒரு உவமையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள செல்வச் சீமானாகவோ பட்டம் பெற்றவனாகவோ இருக்க வேண்டிய தேவை இல்லை என்கிற நிலையை திமுகதான் ஏற்படுத்தியது. ஒதுங்கி நிற்கவைக்கப்பட்ட அத்தனை தரப்பையும் தயக்கமின்றி அரசியலுக்குள் பங்களிப்பு செய்ய வைத்தது. இந்த இடத்தில்தான் கலைஞரின் அரசியல் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அண்ணா, பேராசிரியர், நாவலர் என எல்லாருமே மெத்த படித்தவர்கள். பெரும்பணக்காரராக இருந்த பி.டி.ராஜன் எங்கே? கலைஞர் எங்கே?
கலைஞர் திருக்குவளையில் எளிய இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ரீதியாக சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக என எந்த அளவுகோலை வைத்துக் கொண்டாலும் கலைஞர் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவராலும் திமுக என்கிற இந்த அமைப்புக்குள் சரிசமமாக போட்டியிட முடிந்தது. சுயமரியாதையோடு இருக்க முடிந்தது. கலைஞரை வைத்துதான் திமுகவுக்கும் மக்களுக்குமான பிணைப்பையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த 75 ஆண்டுகளில் திமுக 'வாழ்ந்திடுவோம் வாரீர்!' என அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதனால்தான் இந்த அமைப்பில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தியாகம் இரண்டாம்பட்ச விஷயமாகத்தான் இருந்தது. தியாகம்... தியாகம் என பேசி ஒன்றுமே இல்லாமல் அழிந்துபோவதில் பிரயோஜனமில்லை என்கிற பார்வை திமுகவுக்கு இருந்தது.
அரசியல்ரீதியாக திமுக எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் விமர்சனம் ஆகியிருக்கிறதே. ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்னமும் அதற்கான விமர்சனங்களை திமுக எதிர்கொண்டு வருகிறதே.
கட்சிரீதியாக மதிப்பிடுவதைவிட அதிகாரக் குவிப்பு - அதிகாரப் பகிர்வு என்கிற இடத்திலிருந்துதான் திமுகவின் தேர்தல் கூட்டணிகளை மதிப்பிட வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்கள் எடுத்த முடிவின் முழு தார்ப்பரியத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதிகாரப் பங்கீடு அல்லது அதிகாரப் பகிர்வு என்பதை நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்திலிருந்தே திமுக உட்கொண்டு அதற்காக கடுமையாகப் போராடியது. 1999 ல் திமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை இன்னமும் விமர்சிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பான நிகழ்வுகளை மறந்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஒற்றை ஆட்சிதான் என காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. அதிகாரக் குவிப்பின் உச்சகட்டம் அது. எங்கெல்லாம் அதிகாரப் பகிர்வுக்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் திமுக முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. திமுகவின் தேர்தல் கூட்டணிகளையும் இதை அளவுகோலாக வைத்துதான் பார்க்க வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கு வாய்ப்பிருக்கும் இடத்தில்தான் விவாதங்களுக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கும் இடமிருக்கும். அதனாலேயே திமுக எப்போதுமே அதிகாரப் பகிர்வின் பக்கத்தைதான் தேர்ந்தெடுக்கும்.
அண்ணா, கருணாநிதி, இப்போது ஸ்டாலின் அவர்களின் வழித்தோன்றலாக அவர்கள் அளவுக்கு வீரியமாக ஸ்டாலின் செயல்படுகிறாரா?முதல்வர் ஸ்டாலின்
அண்ணாவின் காலத்தில் அரசியல் சூழல் இவ்வளவு மோசமாக இல்லை. எதிர்க்கட்சியாக நிற்கிறோம் என்பதற்காகவே எவ்வளவு மோசமான நடவடிக்கைகளையும் ஏவலாம் என்கிற எண்ணம் அண்ணா எதிர்த்த ஆளுங்கட்சிகளுக்கு இல்லை. அண்ணா அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் கலைஞர் 50 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்தார். ஒன்றிய மாநில உறவுகளுக்கிடையேயான சிக்கலை கலைஞர் அளவுக்கு விவாதித்தவர் யாருமே இருக்க முடியாது. ராஜ மன்னார் தலைமையில் தனிக்கமிட்டியையே ஒன்றிய - மாநில உறவைப் பற்றி ஆராய அமைத்தாரே. ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் அவர் அண்ணாவும் கலைஞரும் கலந்து நிற்கக்கூடியவர். தற்போதைய ஒற்றை அடையாள அதிகாரக் குவிப்பின் பக்கம் கொஞ்சம் கூட நெருங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். காங்கிரஸ் முக்த் பாரத் என பாஜக சொல்கிறது. அதனால்தான் காங்கிரஸூடன் அவ்வளவு நெருக்கமாக நிற்கிறார் ஸ்டாலின். நாம் ஏன் காங்கிரஸூக்கு இத்தனை சீட்டுகளை வழங்க வேண்டும் என திமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கு கோபம் இருக்கலாம். ஆனால், இது வெறும் இடங்களை மையப்படுத்தியது அல்ல. அடிப்படை அரசியல் சமநிலைக்கானதுதான் திமுக - காங் கூட்டணி. பல கட்சிகளையும் ஒன்றிணைத்துத் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் அதே கூட்டணியை தக்க வைக்கும் பக்குவம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
திமுகவின் வரலாற்றிலேயே இது ஒரு புது மாற்றம்தான். இந்திரா காந்திக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்த ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் கூட ஸ்டாலினை ஒப்பிடலாம். தேசிய அரசியலில் ஸ்டாலின் இப்போது அப்படியொரு நிலையில் இருக்கிறார். அவரால் மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு எனப் பலதரப்பட்டவர்களிடமும் பேச முடிகிறது. அவரின் குரலுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. கலைஞர் 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருந்ததால் ஸ்டாலினின் அனுபவத்தைப் பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 1966 இல் அதாவது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டே ஸ்டாலின் அமைப்புக்குள் இயங்க ஆரம்பித்துவிட்டார். இன்றைய தேதிக்கு அவருக்கு இருக்கக்கூடிய அனுபவம் தேசியளவிலேயே ஒரு சில அரசியல்வாதிகளுக்குதான் இருக்கும். 1972 இல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவையும் எமெர்ஜென்சியில் ஒரு அரசு இயந்திரம் எப்படி செயல்படும் என்பதையும் அவர் நேரில் எதிர்கொண்டிருக்கிறார். அப்படியான அனுபவமெல்லாம் இப்போதுள்ள பல அரசியல்வாதிகளுக்கும் கிடையாது.
அண்ணாவுக்கும் கலைஞருக்கும் எல்லாமே புதிது. அவர்கள் எல்லா தடத்திலும் புதுப் பாதையை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், ஸ்டாலினுக்கு அவர்கள் இருவரும் விட்டுச் சென்ற முன்னுதாரணங்கள் நிறையவே இருக்கின்றன. அதனால்தான் தான்தோன்றித்தனமாக எந்த முடிவையும் எடுக்காமல் எல்லாரிடமும் கலந்துபேசி முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.
வாரிசு அரசியல், சீனியர் - ஜூனியர் உரசல் என பல சர்ச்சைகளை திமுக இப்போது எதிர்கொண்டு வருகிறதே?
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட எல்லா கட்சியிலுமே சீனியர் - ஜூனியர் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். 20-25 ஆண்டுகள் கட்சியில் செலவளித்துவிட்டவர் தன்னுடைய அடுத்தக்கட்டம் என்ன என யோசிப்பார். ஆனால், நீண்ட நெடும் பாரம்பரியத்தால் அவரை விடவும் சீனியர் ஆட்கள் கட்சியில் இருக்கத்தான் செய்வார்கள். ஒரு கட்சி உயிரோட்டத்தோடு இருப்பதைத்தான் இந்த சர்ச்சைகள் வெளிக்காட்டுகின்றன. அதேமாதிரிதான் வாரிசு அரசியல் என்கிற விமர்சனமும். ஸ்டாலின் தேர்தலில் நின்றுதானே எம்.எல்.ஏ, மந்திரி, முதலமைச்சர் என பதவிகளை அடைந்திருக்கிறார். அதேமாதிரிதான் உதயநிதியும் தேர்தலில் நிற்கிறார். உதயநிதி ஸ்டாலின்
மக்கள் அவரை ஏற்றுக்கொண்டால் அவர் அடுத்தக்கட்டத்துக்கு செல்லப்போகிறார் இல்லையேல் அப்படியே கரைந்துவிடுவார் அவ்வளவுதான். வாரிசு என்பதாலயே எல்லாவற்றையும் அடைந்துவிட முடியும் என்றால் இன்றைக்கு அழகிரி எங்கே இருக்கிறார்? நாவலர் நெடுஞ்செழியன் எத்தனை முயற்சிகளை செய்திருப்பார்? அவர் எந்த உயரத்தை எட்டினார்? அரசியலில் வாரிசா இல்லையா என்பதெல்லாம் பிரச்னையில்லை. மக்களால் ஏற்கப்பட்டவர் மக்களால் ஏற்கப்படாதவர், அந்த கட்சியின் அமைப்பால் ஏற்கப்பட்டவர், அமைப்பால் ஏற்கப்படாதவர் என்பதை மட்டுமே இங்கே பார்க்க வேண்டும்.
பவளவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் திமுக இனி கவனமாக இருக்கவேண்டிய விஷயங்களாக நீங்கள் நினைப்பவை என்னென்ன?MK Stalin
அதிகாரக் குவிப்பிலிருந்து திமுக எப்போதுமே தள்ளியிருக்க வேண்டும். அதை எதிர்ப்பதில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஒரு முறை இப்படி கூறினார். அதாவது, 'பல மத்திய அரசுகள் திமுகவின் குரலை கேட்கும் நிலையில் இருந்திருக்கின்றன. ஆனால், அப்போதும் திமுக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர வேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். ஆனால், ஒருபோதும் மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி கவர்னர் பதவியை வாங்கியதில்லை.' எனக் கூறியிருந்தார். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்பதில் அவர்கள் காலங்காலமாக தெளிவான நிலைப்பாட்டில் இருந்திருக்கிறார்கள். இந்த அரசியல் பார்வைதான் அவர்களுக்கான அரண். அதை என்றுமே கைவிட்டுவிடக்கூடாது.
http://dlvr.it/TDKmxx