மும்பையில் பருவ மழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டடங்களில் வசிப்பவர்களை பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் இரண்டு மாடிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. பாந்த்ராவில் உள்ள சாஸ்திரி நகரில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிந்த கட்டடம்
மொத்தம் 16 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோருக்கு லேசான காயம் என்று போலீஸார் தெரிவித்தனர். 56 வயது ஷாநவாஸ் ஆலம் என்பவர் மட்டும் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இடிந்து விழுந்த கட்டடம் ஆபத்தானது என்று ஏற்கனவே மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் அக்கட்டடத்தை காலி செய்யாமல் மக்கள் அதில் வசித்து வந்தது குறிப்பிடதக்கது.
http://dlvr.it/SRtkX4
http://dlvr.it/SRtkX4