மேற்கு ஆப்பிரிக்கா அருகே 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தல்
மும்பை: 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற துருக்கிய எண்ணெய்-ரசாயண கப்பல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் அருகே கடற்கொள்ளையர்களால்
கடத்தப்பட்டுள்ளது.
துருக்கிய நிறுவனமான ஜீடன் லைன்ஸுக்கு சொந்தமான எம்.வி. காட்டன் என்ற
எண்ணெய் மற்றும் ரசாயண சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல் கடந்த திங்கட்கிழமை
காலை ஆப்பிரிக்க நாடான கபான் கடல்பகுதியில் சென்றது. அப்போது ஜென்டில்
துறைமுகம் அருகே அந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
ஜென்டில்
துறைமுகத்தில் இருந்து கிளம்பிய பிறகு கப்பலுடன் தொடர்பு கொள்ள
முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட கப்பல் நேற்று நைஜீரியா நோக்கிச் சென்றது செயற்கைக்கோள்
படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கேப்டன் ஷிஷிர் வாஹி(54) தலைமையிலான அந்த
கப்பலில் 24 இந்திய மாலுமிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது
குறித்து கேமரூன் மற்றும் நைஜீரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாக கபானுக்கான துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.
கப்பல் கடத்தப்பட்டதை மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து தலைமை அலுவலக
அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தற்போதைக்கு எந்த தகவலும்
இல்லை என்றும், அதற்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று
கடத்தப்பட்ட 24 இந்தியர்களின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.