சென்னை: தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 82. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார். திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்.
ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
English summary
Poet Vaali was passed away on Thursday in Chennai due to ill healtjh.