நிலக்கரி ஊழல்: அறிக்கை விவரங்களை பகிரக்கூடாது: சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
புதுடில்லி: நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது என சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தியுள்ளது. இதில் கடைசி வரை உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
நிலக்கரி ஊழல் :
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. 1.82 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.யில் பா.ஜ.எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் பதவி விலக கோரின.இந்நிலையில் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் முன்னர் மத்திய சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் சரிபார்த்து அறிக்கையை திருத்தியதாக , சி.பி.ஐ.இயக்குனர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.இதையடுத்து சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் பதவி விலகினார்.
சுப்ரீம் கோர்ட் அறிவுரை:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.இதில் சி.பி.ஐ. சார்பில் கூறுகையில், விசாரணை தொடர்பாக ,அரசின் அனுமதி பெறவே விவரம் பகிரப்பட்டதாக கூறப்பட்டது. வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிலக்கரி ஊழல் விசாரணை தொடர்பாக ஏதேனும் தடையிருந்தாலோ ,நெருக்கடி கொடுக்கப்பட்டாலோ, சுப்ரீம் கோர்ட்டில் தாராளமாக தெரிவிக்கலாம். மேலும் இனி சி.பி.ஐ. அறிக்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் சி.பி.ஐ.வழக்கறிஞர்களிடம் ஆலோசனை என்ற பெயரில் விவரங்களை தெரிவிக்க கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தியுள்ளது.