கணவனின் பூர்வீக சொத்தில் விவாகரத்து மனைவிக்கு பங்குண்டு: சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல்
டெல்லி: விவாகரத்து பெற்ற பெண், தனது கணவனின் மூதாதையர் சொத்தில் இருந்து பங்கு பெறலாம் என்பதற்கான சட்டத்திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பெண்கள் சுயமாக வாழ வழி செய்யும் வகையில் கணவரிடம் இருந்து போதுமான நஷ்டஈடு பெற சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. திருமண சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆராய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான அமைச்சர்கள் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது.
விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு திருமண சட்டத்தின் கீழ் பயன்பெறுவது குறித்து இக்குழு விவாதித்தது.இப்போதுள்ள திருமண சட்டப்படி விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவனின் சுய சம்பாத்தியத்தில் கிடைத்த சொத்தில் பங்கு உண்டு. இப்போது, அச்சட்டத்தில் 13எப் என்ற புதிய பிரிவை சேர்த்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. இதன்படி, விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவனின் பரம்பரை சொத்திலும் உரிமை உண்டு.
பரம்பரை சொத்தை பிரிக்க முடியவில்லை என்றால், அந்த சொத்தில் கணவருக்கு உள்ள பங்கை கணக்கிட்டு அதற்கேற்ப போதுமான நஷ்டஈடு வழங்கலாம். நஷ்டஈடு தொகையை விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே கணக்கிடலாம். இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
English summary
The government Wednesday approved recommendations of a Group of Ministers (GoM) to make marriage laws more woman friendly, including providing for compensation to a woman from her husband's ancestral property in the case of divorce - which had been a major sticking point earlier.