பாகிஸ்தானுக்கு வந்து மதரஸாவில் இஸ்லாமிய கலாச்சாரத்தை படி: மலாலாவுக்கு தாலிபான்கள் கடிதம்
இஸ்லாமாபாத்: தலையில் குண்டடிபட்டு குணம் அடைந்து இங்கிலாந்து பள்ளியில் படிக்கும் பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப்சாயை நாட்டுக்கு திரும்பி வந்து மதரஸாவில் சேர்ந்து படிக்குமாறு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா யூசுப்சாய்(16) கடந்த ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்டார். தலையில் குண்டடிபட்ட அவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார்.
மேலும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்து வருகிறார். கடந்த வாரம் அவர் ஐ.நா.வில் உரை நிகழ்த்தினார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் தீவிரவாதி அத்னான் ராஷித் மலாலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நீ மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நான் அறிவுரை வழங்குகிறேன். இங்கு வந்து உங்கள் ஊரில் உள்ள ஏதாவது பெண்கள் மதரஸாவில் சேர்ந்து இஸ்லாமிய கலாச்சாரம், அல்லாஹ்வின் புத்தகத்தை படிக்க வேண்டும்.
உன் பேனாவை இஸ்லாத்திற்காக பயன்படுத்து. நம்மை அடிமைப்படுத்த விரும்பும் சக்திகளை அம்பலப்படுத்து. நீ தாலிபான்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் தான் உன்னை தாக்கினோம். நீ பள்ளிக்கு சென்றதாலோ அல்லது கல்வியை விரும்பியதாலோ உன்னை தாக்கவில்லை.
தாலிபான்களோ அல்லது முஜாஹிதீன்களோ ஆண், பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. நீ எதிரிகளின் கையில் உள்ளாய். பிறரின் பேச்சைக் கேட்டு நீ பேசுகிறாய் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
English summary
Days after Malala Yousufzai made a passionate appeal at the UN for the Education of children, the Taliban on Wednesday asked the teenage activist to return to Pakistan and join a madrassa in the restive northwest. Adnan Rashid, a Taliban fighter wanted for an attempt to assassinate former President Pervez Musharraf, wrote a letter to Malala, who was shot in the head in a militant attack last year.