மெட்ரோ ரயில்: பாரம்பரிய கட்டங்கள் தவிர பிற கட்டிடங்களை இடித்து தள்ளலாம்
சென்னை: சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பாரம்பரிய கட்டங்களைத் தவிர இடைஞ்சலாக இருக்கும் கட்டிடங்களை இடித்து தள்ளலாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்து அதை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்து வருகிறது.
இதை எதிர்த்து சென்னை நகரில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு உள்ள இடத்தில் 39 கடைகள் உள்ளன. அங்கு ஓட்டல்கள், டீ கடைகள், லாட்ஜ்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. அந்த கட்டிடங்களை காலிசெய்து நிலத்தை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது. அங்குள்ள கட்டிடங்களை சம்பந்தப்பட்டவர்களே இடித்து விட்டு நிலத்தை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த இடத்தில் கடைகளை வைத்துள்ள இஸ்மாயில் உட்பட 39 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்து, மனுதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டு அதன்பிறகு அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதில், மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்கள் நலனை கருதி கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இதற்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்து அரசு உத்தரவிட்டது. எனவே மனுதாரர்களுக்கு அரசு நோட்டீசு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
உயர்நீதிமன்ற அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுத்தால் போதும் அதை அரசு செய்து விட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் திட்டமாகும். பாரம்பரிய கட்டிடங்களை தவிர மற்ற கட்டிடங்களை அரசு இடிக்கும் என்று நம்புகிறோம். அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மனுதாரர்கள் குத்தகைக்கு இருந்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்.
காலி செய்த பிறகு அங்குள்ள கட்டிடங்களை இடித்து தள்ளி விட்டு அதை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது செல்லும். என்று தீர்ப்பு கூறினர்.