திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட நாகமலை புதுக்கோட்டை கண்மாய்க்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக பறக்கும் படை வட்டாட்சியர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படையினர் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அங்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய துண்டுச்சீட்டு மற்றும் ரூ.1,405 பணத்துடன் நின்ற அதிமுகவைச் சேர்ந்த மதிவாணன் (42) என்பவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
அதேபோல, திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் மலைச்சாமி (48), வடிவேல்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிலைமான் அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரில் போலீஸார் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாக்காளர் பெயர்கள் அடங்கிய துண்டுச்சீட்டுகள் மற்றும் பணத்துடன் சென்ற திமுக கிளைச் செயலர் அப்துல்மஜீத் (59), திமுக உறுப்பினர் கார்த்திக்குமார் (32), சிவகங்கை 19 வார்டு செயலர் ரமேஷ் (44) ஆகிய மூவரையும் சிலைமான் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31,635 பறிமுதல் செய்தனர்.
சிலைமான் அருகே உள்ள எல்கேடி நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் பாண்டி (63), தேனியைச் சேர்ந்த மாரி(28), ராஜசேகர் (39), ரவீந்திரன் (55) ஆகியோரையும் சிலைமான் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32,300 பறிமுதல் செய்யப்பட்டது.
விராதனூர் பகுதியில் பணம் கொடுக்க முயன்ற அதிமுக நிர்வாகிகள் பெரியசாமி (52), முருகன் (45) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்