உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 120 பேர் உயிரிழந்தனர். தவிர 200-க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 76 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சமீபகாலங்களில் நடந்துள்ள மிக மோசமான ரயில் விபத்தாகும் இது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பிகார் தலைநகர் பாட்னாவை நோக்கிச் செல்லும் இந்தூர்-பாட்னா விரைவு ரயில் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே புக்ராயான் என்ற இடத்தின் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் தடம்புரண்டதில் எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4 ஆகிய நான்கு பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.
விபத்தில் 120 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 200-க்கும் மேலானவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 76 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் உயிழந்தவர்களில் 62 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் உத்தரப்பிரதேசம், 15 பேர் மத்தியப் பிரதேசம், 6 பேர் பிகார் மற்றும் மகாராஷ்டிரம், குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது. ரயில் விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ராணுவத்தினர், போலீஸார்,. ரயில்வே ஊழியர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் பெட்டியினுள் சிக்கியவர்கள் காஸ் கட்டர்கள் மூலம் கதவுகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விசாரணைக்கு உத்தரவு: விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். துரதிருஷ்டவசமான இந்த விபத்தைத் தொடர்ந்து, அனைத்து மீட்புப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்துக்கு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்த ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் (பொறியாளர் பிரிவு) விசாரணை நடத்துவார். அவர் தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விபத்து குறித்து ரயில்வே துறை இணையமைச்சர் ராஜேன் கோஹைன் கூறியதாவது:
மிகச் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாண்டு வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கவலையளிக்கிறது.
இதுவரை ரயில் ஓட்டுநரின் கவனக் குறைவால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
ஆனால், கவனமாகச் செயல்பட்டும் விபத்து ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
ரயில்பாதையில் ஏற்பட்ட விரிசலால் பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் என்றார் அவர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, கான்பூர் - ஜான்ஸி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை முழுவதையும் ரயில்வே துறை விடியோ படம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் விபத்தையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவின்பேரில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பொது இயக்குநர் விபத்துப் பகுதிக்கு விரைந்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த பகுதிக்கு, பேரிடர் மீட்பு ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனில் சக்úஸனா தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், விபத்து நேரிட்ட விதம் மற்றும் நேரத்தைக் கொண்டு, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாநில டி.ஜி.பி. ஜகி அகமது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ரூ.12.5 லட்சம் இழப்பீடு..
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹானும் அறிவித்துள்ளனர். இந்த வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் அருகே அதிவிரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து வேதனை அடைந்தேன்.விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளையும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் உத்தரப் பிரதேச அரசு அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர்
பாட்னா-இந்தூர் விரைவு ரயில் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்னை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் விபத்து குறித்து பேசினேன். நிலைமையை அவர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
- நரேந்திர மோடி, பிரதமர்
இந்த ரயில் விபத்தில் தங்கள் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்தவர்கள் அடைந்துள்ள துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாங்க முடியாத அவர்களது துயரத்தை இந்திய தேசமே ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்கிறது. ரயில்வே துறை அமைச்சகம் உரிய விசாரணை மேற்கொண்டு இந்த மோசமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் என்று நம்புகிறேன்.
- சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவைத் தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தேன். இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்த மாட்டேன். தற்போது உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை. அரசியல் பேசுவதற்கு இது நேரமில்லை.
English Summary : UP Train crash kills 120.Uttar Pradesh at Kanpur on Sunday morning, 120 people were killed in a train accident. More than 200 were injured. 76 passengers of whom is in critical condition.