இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகியுள்ளது இந்தியா. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, கடந்தப் போட்டியில் இந்தியாவை தோல்வியின் விளிம்பு வரை கொண்டு சென்றது. அதனால் அந்த அணியும் அபாரமாக ஆட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார். அதனால் கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கெளதம் கம்பீருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் அறிமுகமாகியுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் சதமடித்த கையோடு களமிறங்கும் ராகுல், இந்தப் போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கடந்த போட்டியில் சதமடித்த அவர், இந்தப் போட்டியிலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த ஆண்டர்சனும் பிராடும் தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தினார்கள். இரண்டாவது ஓவரிலேயே ராகுலின் விக்கெட்டை பிராட் வீழ்த்தினார். ராகுல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல முரளி விஜய் 20 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலியும் புஜாராவும் கடகடவென ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். நிறைய பவுண்டரிகள் கிடைத்தன. அதேசமயம் இருவருக்குமிடையே சரியான புரிந்துணர்வு இல்லாததால் ரன் அவுட் ஆகியிருக்கவேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்தக் குழப்பத்தால் சிறிது நேரம் நிதானமாகவும் ஆடினார்கள். உணவு இடைவேளைவரை அந்த நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள்.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. புஜாரா 37, கோலி 35 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த ஜோடி தொடர்ந்து தங்களது பேட்டிங் திறமையை நிரூபித்தது. முதல் நாள் ஆடுகளம் என்பதால் பேட்டிங்குக்கு உகந்த சூழலை இருவரும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் எல்லாத் திட்டங்களையும் செயலிழக்கச் செய்தார்கள். கோலி 87 பந்துகளிலும் புஜாரா 113 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள். அரை சதம் எடுத்தபிறகு இருவரின் ஆட்டத்திலும் சதமடிக்கவேண்டிய உறுதி தெரிந்தது.
இதனிடையே, தேநீர் இடைவேளைக்கு முன்பு சதம் எடுத்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தார் புஜாரா.
56.2 ஓவரின்போது அவர் 97 ரன்களில் இருந்தார். இன்னும் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்தால் சதத்துடன் தேநீர் இடைவேளையில் ஓய்வறைக்குச் செல்லமுடியும் என்கிற நிலைமை இருந்தபோது திடீரென மைதானத்துக்குள் நாய் புகுந்தது.
இதனால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார். அப்போது பந்துவீசிக்கொண்டிருந்த பிராட், வெளியே போ என்று நாயிடம் சைகை செய்தார். பணியாளர்கள் ஓடிவந்து நாயை வெளியே துரத்த முயன்றார்கள். அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. சரி ஆட்டத்தைத் தொடரலாம் என்று அனைவரும் தயாராக இருந்தார்கள். அப்போது நாய் மீண்டும் உள்ளே புகுந்து ஆட்டத்தைத் தடை செய்தது. மீண்டும் பணியாளர்கள் நாயைத் துரத்திப் பார்த்தார்கள். ஆனால் அது வெளியேறுவதாக இல்லை. இதனால் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் தேநீர் இடைவேளைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் தேநீர் இடைவேளைக்கு முன்பு புஜாராவால் சதம் எடுக்கமுடியாமல் போனது.
இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 56.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. புஜாரா 97, கோலி 91 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்து ஆச்சர்யப்படுத்தினார் புஜாரா. அவர் 183 பந்துகளில் சதம் எடுத்தார். இதன்பிறகு 154 பந்துகளில் சதம் எடுத்தார் கோலி.
இதன்பிறகு ஆண்டர்சன் பந்துவீச்சில் 119 ரன்களில் ஆட்டமிழந்தார் புஜாரா. கோலியும் புஜாராவும் 3-வது விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்தார்கள். அடுத்தவந்த ரஹானே, சிறிதுநேரம் தாக்குப்பிடித்து 23 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனிடையே விராட் கோலி 238 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 151 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்துத் தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Summary : 2nd Test: Kohli, Pujara century Astounding! India 317/4