புதுதில்லி: புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.
தொடர்ந்தும் பண நோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல் காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 18 என அடுத்தடுத்து இரூ முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த சலுகை நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சிலநாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்க கட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தில்லியில் இன்று மத்திய மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
Summary: Customs fees on national highways canceled till November 24: Gadkari notice!