நாடு முழுவதும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட் டதைத் தொடர்ந்து, கடந்த இருதினங்களாக ஏடிஎம் மையங் களில் 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 3-வது நாளான நேற்றும் பெரும்பாலான ஏடிஎம்-கள் மூடப்பட்டிருந்தன. குரோம்பேட்டை பகுதியில், ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில் மட்டும் பணம் நிரப்பப்பட்டிருந்தன. இவற்றில் பணம் தீர்ந்த சில மணி நேரங்களில் மீண்டும் நிரப்பப்பட்டதால் பொது மக்கள் சிரமமின்றி பணம் எடுத்தனர்.
அதேசமயம், பாரிமுனை, திரு வல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் பெரும் பாலான ஏடிஎம் மையங்கள் பணமின்றி மூடப்பட்டிருந்தன. தாம்பரம்- வேளச்சேரி சாலையில் மகாலட்சுமி நகர் சந்திப்பு அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்று பொதுமக்கள் பணம் எடுத்தனர். வங்கி அதிகாரிகள் ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் தீர்ந்து விட்டால் அடுத்த சில மணி நேரங்களில் பணத்தை நிரப்பி பொதுமக் களுக்கு உதவினர். இந்தியன் வங்கியின் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைத்தது.
ஏடிஎம் மையங்கள் மட்டுமின்றி வங்கிகளிலும் நேற்று காலை முதல் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் பகுதியில் சில வங்கிக் கிளைகளின் உள்ளே நெருக்கடியை கட்டுப்படுத்தும் விதமாக, பாதுகாவலரை வாயிலில் நிறுத்தி, ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும், பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் வசதி ஏற்படுத்தியிருந்தனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஏடிஎம்களில் காலையில் நிரப்பப்பட்ட பணம் மதியத்துக்குள் தீர்ந்து போனது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் குவிந்தனர்.