ஆந்திராவில் செம்மரங்களை வெட்டிய 3 தமிழர்கள் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது கடத்தல்காரர்கள், கற்களை கொண்டு தாக்கியதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கடப்பா மாவட்டம் நல்லமல வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடத்தல் காரர்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள், கற்களை கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தற்காப்பிற்காக வானத்தை நோக்கி தூப்பாக்கியால் சுட்டனர். எனினும் கடத்தல் காரர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 20க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் தமிழர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.