தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால், நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 விவசாயிகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.
தலைஞாயிறை அடுத்துள்ள பிரிஞ்சிமூலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன் 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், பயிர்கள் முளையிலேயே கருகின. இதனால் மனவேதனை அடைந்த முருகையன் தற்கொலை செய்து கொண்டார். முருகையனின் இறுதி ஊர்வலத்தில், அவருக்கு நிலம் குத்தகைக்கு கொடுத்த விவசாயி பாலசுப்பிரமணியனும் கலந்துகொண்டார்.
தனது பயிரும் கருகிய நிலையில் இருப்பதால், தனக்கும் இதே நிலைதான் ஏற்படும் என மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியன், சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த சோகம் அடங்குவதற்குள், சிக்கலை அடுத்துள்ள தெற்குவெளி கிராமத்தை சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி என்பவர், தனது சம்பா பயிர் தண்ணீர் இல்லாமல் கருகிப் போயிருப்பதைக் கண்டு மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாகை விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் ஆறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.