தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்ற மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு காவல் போடப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (நவ. 22) எண்ணப்படுகின்றன.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 6 மாதங்களுக்குப் பின் இந்த 2 தொகுதிகளுக்கும், இதுபோல் கடந்த தேர்தலின்போது
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம். சீனிவேல் காலமானதை அடுத்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் கடந்த சனிக்கிழமை (நவ. 19) வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் 69.02 சதவீதமும், அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
தஞ்சாவூர் தொகுதி: தஞ்சை தொகுதியில் வாக்குப் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
இந்தப் பாதுகாப்பு அறையைச் சுற்றி 24 மணிநேரமும் 405 பேர் 3 அடுக்குகளாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதி: அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு பாதுகாப்புப் பணியில் தமிழ்நாடு காவல் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 15 துணை ஆய்வாளர்கள், 112 காவலர்கள் என மொத்தம் 130 காவல் துறையினர், ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் 63 பேர் என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
திருபரங்குன்றம்: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களுடன் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப்பகுதியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் வாயில்களில் காவலர்கள் என 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குச் செல்ல வெளி ஆள்களுக்கு அனுமதி கிடையாது.
வாக்கு எண்ணிக்கை: இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 22) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் பார்வையாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில், 20 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன. தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் தெரியவர வாய்ப்புள்ளது.
English Summary : Counting tomorrow at 3 blocks.Thanjavur, Aravakurichi, Thirupparankundram the assembly seats Saturday voter turnout electronic machines securely placed 3-tier police laid. These three constituencies of Puducherry Nellithope constituency votes on Tuesday (Nov. 22) are numbered.