பெரம்பூர்: செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றி, புதிய ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் 3வது நாளாக நேற்று வங்கிகளுக்கு படையெடுத்தனர். ஆனால், பல வங்கிகளில் காலை முதல் மாலை வரை காத்திருந்தவர்களை பணம் இருப்பு இல்லை எனக்கூறி அதிகாரிகள் வெளியேற்றியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வியாசர்பாடியில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. எனவே, பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கியில் செலுத்தி, புதிய 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது.
அறிவிப்பு வெளியான மறுநாள், புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக அனைத்து வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. 10ம் தேதி மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டதால், பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் ஏராளமானோர் அங்காங்கே உள்ள வங்கி கிளைகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றனர். சில வங்கிகளில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக ரூ.100 மற்றும் புதிய 2000 நோட்டுகள் வழங்கப்பட்டது. ஒரு சில வங்கிகளில் ரூ.100, 50, 20, 10 ஆகிய நோட்டுகள் வழங்கப்பட்டது. வங்கிகள் தவிர தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல தபால் அலுவலகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கிகளிலும் கூட்ட நெரிசலால் பலர் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். மறுநாளும் அனைத்து வங்கி கிளைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டதால், பணம் எடுக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சில வங்கிகளில் காலையில் இருந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மாலையில் பணம் வழங்க முடியவில்லை எனக்கூறி அதிகாரிகள் கூறியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
மூன்றாம் நாளான நேற்று ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவித்தாலும் 80 சதவீத ஏடிஎம்கள் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால், வங்கி கிளைகளில் நேற்றும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. காலையில் இருந்து மாலை வரை மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை 3 மணிக்கு மேல் பல வங்கிகளில் பணம் இல்லை என கூறியதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் நேற்று காலை முதல் மாலை வரை புதிய ரூபாய் நோட்டுகளை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், மாலை 3 மணிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கைவசம் இல்லை என கூறிய வங்கி அதிகாரிகள் பொதுமக்களை வெளியேற்றி, வங்கியை இழுத்து மூடினர்.
இதனால், காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர், அதிகாரிகளை கண்டித்து, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வங்கி மேலாளரிடம் பேசி மாலை 5 மணிவரை பணம் வழங்ககோரியும், வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து நாளை காலையில் வந்து பணத்தை பெற்றுகொள்ளுமாறும் கூறினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்துள்ளதால், கடைகள், பேருந்து, மெடிக்கல், மருத்துவமனை உள்ளிட்ட எங்கும் அவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளோம். வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறலாம் என கடந்த 3 நாட்களாக அலைந்தாலும், இதுவரை பெற முடியவில்லை. கூட்டம் மிகுதியால் காலையில் இருந்து கால் கடுக்க வரிசையில் காத்திருந்தால், மாலையில் பணம் இல்லை. நாளைக்கு வாருங்கள் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. தினசரி வேலைகளை விட்டுவிட்டு வங்கிக்கு அலைவதே வேலையாக உள்ளது. அப்படி அலைந்தாலும் பணம் கிடைப்பதில்லை. எனவே, பொதுமக்கள் நிலைமையை புரிந்து அனைத்து வங்கி கிளைகளிலும் புதிய ரூபாய் நோட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.