புதுடில்லி: கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட முடிவில் மாற்றமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊழல்,கறுப்பு பணத்தை ஒழிக்கவும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்கவும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து புதிய 2000 , 500 ரூபாய் நோட்டுகள் புழகத்தில் விடப்பட்டுள்ளன. கையில் வைத்துள்ள பழைய நோட்டுகளை டிச.30-க்குள் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெற வங்கி மற்றும் ஏ.டி.எம்.மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பார்லி., குழு கூட்டம்:
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பா.ஜ. பார்லிமென்ட் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ,பா.ஜ. எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குபின்னர் பிரதமர் மோடி கூறியது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த முடிவில் எந்த மாற்றமில்லை. இதனை எந்த சூழ்நிலையிலும் மறு பரிசீலனை செய்ய முடியாது. கறுப்புபணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு பா.ஜ. எம்.பி.க்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.