புதுடெல்லி:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லியில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது இருவரும் மத்திய அரசை கடுமையாக தாக்கிபேசினர், மற்றும் அரசு தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற மூன்று நாட்கள் கெடு விதித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்னதாக போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்து உள்ள பாரதீய ஜனதா, கருப்பு பணம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சாடி உள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா பேசுகையில், “கருப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையானது சிலரை காயம் அடைய செய்து உள்ளது. அவர்களில் அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் அடங்குவார்கள். அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக எண்ணிலடங்கா விமர்சனங்களை முன்வைப்பதில் எல்லையை மீறக்கூடாது.” என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து பேசுகையில், ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் சீடர் என்று கூறிக்கொண்டு டெல்லி மக்களை ஏமாற்றியும், அவமானப்படுத்தியும் வருகிறார் என்றார்.
“அன்னா ஹசாரே அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அவருடைய சீடர் என்று கூறிக்கொள்பவர் கருப்பு பணம் கொண்டு உள்ளவர்களுடன் உள்ளார்,” என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.
மம்தா பானர்ஜி குறித்து பேசுகையில், ”மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட சாரதா சிட்பண்டு மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது மம்தா பானர்ஜி ஒன்றுமே செய்யவில்லை. இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியின் மீது குற்றம் சாட்டிவருகிறார்,” என்றார். அவர்கள் விதித்த கெடு தொடர்பாக சர்மா பேசுகையில், அவர்கள் நாட்டில் அராஜகத்தை விரும்புகிறார்களா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
Summary: 500, 1000 banknotes change Mamata affected Kejriwal: BJP Unsure