கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 6 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி ஜோதி, தமது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மாலையே ஜோதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நோயாளி போல் நடித்து அருகில் உள்ள வார்டில் தங்கியிருந்த அர்ச்சனா என்ற பெண் குழந்தையை கடத்தியுள்ளார்.
மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தினர். அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் டிராவல்ஸ் கார் ஒன்றில், குழந்தையுடன் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஓட்டுநர் காட்டிய வீட்டில் சோதனை செய்த போது குழந்தை அங்கிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த நரேஷ், மனைவி அர்ச்சனா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு, தாய் ஜோதியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விசாரித்தபோது, குழந்தையைத் திருடிச் சென்ற அர்ச்சனா, திருமணமாகி 4 வருடமாக குழந்தை இல்லாததால் கருவுற்று இருப்பதாக 9 மாதமாக குடும்பத்தினரிடம் நடித்துள்ளார். நிறைமாதம் வந்ததும் மருத்துவமனைக்கு வந்து குழந்தையைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரியவந்தது.