
சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், மாம்பலம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய 7 ரயில் நிலையங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 15ம் தேதி, சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து ஐசிஐசிஐ, ஆக்சிஸ், யூகோ வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இந்த 7 ஏடிஎம் மையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஏன் ஏடிஎம் மையங்களுக்கு ரயில்வே துறை சீல் வைத்துள்ளது என்று விசாரித்த போது, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஏடிஎம் மையங்களுக்கு தலா 3.5 லட்சமும், பெரம்பூர் மாம்பலம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம் என 5 ஏடிஎம் மையங்களுக்கு தலை 3 லட்சமும் என 22 லட்ச ரூபாய் வாடகைத் தொகையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செலுத்தாமல் உள்ளது தெரிய வந்தது.
மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 7 ஏடிஎம் மையங்களை அமைக்க 2007 முதல் 2012ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், அது மீண்டும் புதுப்பிக்கப்பட வில்லை என்றும் வாடகைத் தொகையும் செலுத்தாத நிலையிலேயே ரயில்வே நிர்வாகம் ஏடிஎம் மையங்களை மூடும் நிலை ஏற்பட்டது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சாதாரண பொதுமக்கள் தேடித் திரிந்து ஏடிஎம் மையங்களை கண்டு பிடித்து பணத்தை எடுத்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் 7 ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைவரும் பணம் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English summary:
7 ATM Centers of State Bank of Indian in Railway Stations have been closed due the no-rent payment by Railway board.