பிம்பெர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப்பகுதியில், இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததற்கு இந்திய உயர்மட்ட கமிஷனர் கவுதம் பாம்ப்வாலேவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இரவு இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஜம்மு-காஷ்மீரின் சுந்தேரபானி, நவ்சேரா எல்லை பகுதி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச்சூடு, தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது