
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மறுநாள் வங்கிகள் மூடப்பட்டன. 10ம் தேதி முதல் வங்கிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. துவக்கத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றவர்களுக்கு 4 ஆயிரமும், பின்னர் 4,500ம், கடைசியாக 2000ம் வழங்கப்பட்டது.
வங்கிகளை பொறுத்தவரை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் போதிய 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் இந்த நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் பொதுமக்களும், வியாபாரிகளும் திண்டாடினர். அதே நேரத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் வினியோகிக்கப்பட்ட போதிலும் மறு சுழற்சிக்கு மீண்டும் வங்கிக்கு வருவது குறைந்துள்ளது.
700 கோடி அளவிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை அனைத்தும் வங்கிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த பணம் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வருவது குறைந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு அதே அளவுக்கு பழைய 100 ரூபாய் அல்லது புதிய 500 ரூபாய் வந்திருந்தால் வினியோகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
Recently introduced Rs. 2000 notes that have ben given to people by banks haven't returned for transactions.