ஆமதாபாத்: தனது செலவுக்கு முறைப்படி பணம் எடுக்க பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் ( வயது 97 ) குஜராத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தார். தள்ளாத வயதிலும் வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருந்த அவரை, வங்கி ஊழியர்கள், பொது மக்கள் மிக ஆச்சரியமாக பார்த்தனர்.
வரிசைக்கு வந்த மோடியின் தாயார்:
பிரதமர் மோடியின் புதிய பண பரிமாற்ற உத்தரவால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள், வியாபாரிகள் தங்களின் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
இதனையடுத்து காங்., துணை தலைவர் ராகுல் டில்லி ஏ.டி.எம்., வரிசையில் நின்று பணம் எடுத்தார். இது அரசியல் ஸ்டண்ட் என விமர்சிக்கப்பட்டது. 2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் இன்று ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வரிசையில் நிற்கின்றனர் என பிரதமர் மோடி கிண்டலடித்தார்.
புதிய 2 ஆயிரம் வாங்கினார்:
இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் இன்று ஆமதாபாத் நகரில், உள்ள ஒரு வங்கிக்கு வந்தார். தள்ளாடியபடி வந்த அவர் வரிசையில் நின்றார். அவரிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் ( 4,500 )ஐ, முறைப்படி வங்கி படிவத்தில், ஊழியர்கள் துணையுடன் நிரப்பி கொடுத்தார். தனது அடையாள அட்டையையும் காட்டினார். பின்னர் வங்கி அதிகாரிகள் ஹீராபென்னிடம் புதிய 2 ஆயிரம் மற்றும் சில கரன்சிகளை அவரிடம் கொடுத்தனர். பின்னர் அவர் வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடியின் தாயாரே வங்கிக்கு வந்து வரிசையில் நின்று பணத்தை பெற்றுச் சென்றது நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.