காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப் பட்டு வருபவர்கள் பெரும்பாலும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகின்றனர். இவர் களிடம் பெரும்பாலும் மருத்துவ மனைகளுக்கு வெளியே நிற்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவு கிறது. மாத்திரை, மருந்துகளும் பற்றாக் குறையாக உள்ளது. விபத்தில் அடி படுபவர்கள் தலையில் ஸ்கேன் எடுக்கும் வசதிகள், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வசதிகள் குறைவாக உள்ளன. மனநோய் உள் நோயாளிகள் பிரிவுகள் பல நேரங் களில் பூட்டி கிடக்கின்றன. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் சில டாக்டர்கள் தாங்கள் நடத்தும் சொந்த கிளினிக்கிற்கு வரும்படி நோயாளிகளிடம் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சில தொண்டு நிறுவனங்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். டெக்னீஷியன்கள் இல்லாததால், அந்த மருத்துவ உப கரணங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை.
செங்கல்பட்டு, தாம்பரம்
செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு உட்பட 37 வார்டுகள் உள்ளன. 4,000-க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 1200 பேர், உள் நோயாளிகளாக சிகிச்சை பெறு கின்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளது. பல டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. பலர் தனியாக கிளினிக் வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே இங்கு அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக் காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப் படுகின்றனர். இந்த மருத்துவமனையில் பலத்த காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. சிகிச்சைக்காக வருபவர்களிடம், கட்டாய வசூலில், மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. மருத்துவ உபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளது. வளாகத் தில் பன்றிகள் அதிகளவில் சுற்றி திரிந்து சுகாதார சீர்கேடுகளை உண் டாக்குகிறது. நோயைப் போக்க வேண்டிய மருத்துவமனையே நோய்க்கு காரணமாக விளங்குவது கொடுமை. இங்கு ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள், வெளியில் சென்று ஸ்கேன் எடுத்து வந்த பிறகே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையில் குரோம்பேட்டை மருத்துவமனை நீரில் மூழ்கி செயல்படாமல் போனது. அதற்கு இன்னும் நிரந்தர தீர்வு இல்லை.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட மருத்துவ மனையில் பிரசவத்திற்கு போதிய வசதிகள் இல்லை. பெரும்பாலான நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், அபாயத்தை உணராமல் நோயாளி களுக்கு செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்கள் மற்றும் மயக்க மருந்து டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதிய கட்டிட வசதியும் இல்லை. திருத்தணி மருத்துவமனைக்கு வரும் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந் தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்துவிட்டு, திரு வள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அனுப்பி வைக்கின்றனர்.
மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாததால், குழாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 3,000 உள் நோயாளிகளும், 8 ஆயிரம் வெளி நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவ மனையில் அடிப்படை சுகாதார, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்களும் குறைவாக உள்ளனர். 2,632 படுக்கைகள் மட்டுமே உள்ளதால், சராசரியாக தினசரி ஆயிரம் நோயாளிகள்வரை படுக்கை வசதி இல்லாமலேயே தவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், மருத்துவ மனை சுகாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடநெருக்கடி கடுமையாக உள்ளதால், வார்டுகள் முன்பே வாகனங்களை நிறுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆம்பு லன்ஸ்கள், மருத்துவமனைக்குள் வந்து செல்ல முடியவில்லை. பெரும்பாலான மருத்துவ கருவிகள், 10 மற்றும் 20 ஆண்டிற்கும் முன் வாங்கப்பட்ட பல கருவிகளை பயன்படுத்துவதால் நோய் தொற்று அதிகரிக்கிறது. பல துறைகளுக்கு நிபுணர்கள் இருந்தும் வசதிகள் இல்லை.
இட நெருக்கடியில் தவிக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை.
சிவகங்கை
மனதுக்கு சற்று ஆறுதலாக.. சுத்தமாக பராமரிக்கப்படும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
2012-ல் தொடங்கப்பட்ட சிவகங்கை மருத்துவமனையில் தினமும் 1200 வெளி நோயாளிகள், 700 உள் நோயாளிகள் வருகின்றனர். 500 படுக்கைகள் உள்ளன. எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியும் உள்ளது. ரூ. 2,300 கட்டணத்தில் ஸ்கேன் செய்து தரப்படுகிறது. இதனை காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தால் நோயாளிகள் இலவசமாக பயன்பெறலாம். அந்த வசதி இன்னும் செய்து தரப்படவில்லை.
சிறுநீரகம், இதய நோய் பிரிவு, புற்றுநோய் பிரிவுக்கு டாக்டர்கள் இருந்தாலும், உரிய உபகரணங்கள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக நோயாளிகள் மதுரைக்கு அனுப்பப் படுகின்றனர்.
தேனி
தேனி மருத்துவமனையில் பழுதான லிஃப்ட்.
தேனி கானாவிளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் வசதி என்பது முற்றிலும் இல்லாமல் உள்ளது. சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக போடப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக காணப்படுகிறது. பெண்கள் சிகிச்சை பிரிவில் மின் விசிறிகள் பழுதடைந்து ஓடாமல் இருப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். படுக்கைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. லிஃப்ட் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளதால், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் மாடிப்படியில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படு கின்றனர். தலைக்காய நோயாளிகளுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.
சேலம்
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அடிக்கடி மருந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. புற்று நோய்க்கான சிகிச்சை பிரிவுக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால், தீவிர பிரச்சினை இருப்பவர்கள் சென்னை அல்லது தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது.
மருத்துவமனை டீன் கனகராஜ் கூறுகையில், ‘‘அவசர சிகிச்சை பிரிவு மேலும் சிறப்பாக செயல்பட முது நிலை மருத்துவ மாணவர்கள் கூடுத லாக தேவைப்படுகின்றனர். பொது மருத்துவப் பிரிவுக்கு இளநிலை மருத்துவ மாணவர்கள் கூடுதலாக தேவை. செவிலியர் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக 100 பேருக்கான தேவை இருக்கிறது’’ என்றார்.
தருமபுரி
தருமபுரி மருத்துவக் கல்லூரி கடந்த 2008-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அப்போதுமுதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.
மருத்துவமனை வளாகமும், கட்டிடங்களும் தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. மருத்துவ மனைக்கு வருவோர், உள் நோயாளிகள், அவர்களுடன் தங்குவோர் ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் சுகாதார பிரச்சினை இருந்து வருகிறது. இதய நோய் பிரிவு, புற்றுநோய் பிரிவு, சிறுநீரக நோய் பிரிவு ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. மருத்துவ மனையின் அனைத்து பிரிவுகளிலும் பணியாளர் பற்றாக்குறை, சிறப்பு மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது.
வேலூர்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறையால் குழந்தைகளுடன் தாய்மார்கள் தரையில் அமரவேண்டிய நிலை இருக்கிறது. மருத்துவக் கல் லூரியில் ரூ.1.25 கோடி மதிப்பில் துணிகள் துவைப்பதற்காக இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இயந்திரத்தை இயக்க பணியாளர்கள் இல்லை.
விழுப்புரம்
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சாய்தளப் பாதையில் கற்கள் உடைந்துள்ளன.
விழுப்புரம் அருகே முண்டியம்பாக் கத்தில் அமைந்துள்ளது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை. அறுவை சிகிச்சை மற்றும் பிரசவ வார்டில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விலை அதிகமான மருந்துகளை வெளியிலிருந்து வாங்கி வரச் சொல்கிறார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளி களிடம் ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள். வார்டுகளில் குடிநீர் வசதி இல்லை. பல துறைகளுக்கு மருத்துவர்கள் இல்லை.
மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் வசந்தாமணியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இந்த நிதி யாண்டில் இந்த மருத்துவமனைக்கு ரூ 95 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதால், 6 மாதத்திற்குள் அனைத்து வசதிக ளையும் ஏற்படுத்திவிடுவோம்’’ என்றார்.
கடலூர்
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைக்கேற்ப வார்டுகளின் எண் ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சிடி ஸ்கேன், என்டாஸ்கோப்பி, எக்ஸ்ரே பரிசோதனைகளுக்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். பிரசவத்துக்கு வரும் தாய்மார்கள் பணியாளர்களால் வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதுச்சேரி மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. உள் நோயாளிகளுக்கு தரப்படும் உணவு சரியாக இல்லை. மருத்துவமனையில் எந்த பகுதியும் சுத்தமாக இல்லை.
கோவை
30 வகை மருத்துவத் துறைகள் கொண்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 900-க்கும் அதிகமான மருத்துவர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் தற்போது 250 மருத்துவர்கள், 400 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்கள் போதுமான அளவுக்கு இல்லை.
நோயாளிகளை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள், தனியார் ஆம்பு லன்ஸ்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சி னைகளும் தொடர்கின்றன. நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் இருந்தாலும், அவற்றின் பராமரிப்பு சரியாக இல்லை.
உதகை
உதகை தலைமை அரசு மருத்துவ மனையில் தற்போது 31 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அறுவை சிகிச்சை, இதய நோய், எலும்பு, நரம்பு மண்டலம், குழந்தைகள், கண், பல் உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணர்கள் இல்லை. இதனால் உயர் சிகிச்சைக்கு மக்கள் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை யுள்ளது. மகப்பேறு மருத்துவர்கள் போதுமான அளவு இல்லாததால், தனியார் மருத்துவர்கள் டெபுடேஷன் அடிப்படையில் பிரசவம் பார்க்கின்றனர். எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் கருவிகள் இருந்தாலும், அதை இயக்க உரிய ஊழியர்கள் இல்லை.
நெல்லை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்போர் நிழற்கூடத்தில் செயல்படும் அம்மா உணவகம்.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் நோயாளிகள் வரை தென்மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். மருந்துகளை வழங்கு வதற்கான மருந்தாளுநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.
நோயாளிகள் எண்ணிக்கை அதிக ரிக்கும்போது அவர்கள் தரையில் படுக்க வைக்கப்படும் நிலை உள்ளது. பிரசவத்துக்காக வருபவர்களின் உறவினர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை கட்டாயமாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இம்மருத்துவமனை வளாகத்தில் சமீபத்தில் அம்மா உணவகம் தொடங் கப்பட்டது. ஆனால் உரிய கட்டிட வசதி செய்யப்படவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே நோயாளிகள், அவர்களுடன் வரு வோர் அமரும் நிழற்கூடத்தில் இந்த உண வகம் செயல்படுகிறது. உணவுகளை வெளியில் இருந்து எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனயின் முக்கிய பிரச்சினை குடிநீர். மருத் துவமனை நிர்வாகம் ஆழ்துளை கிணறு களை அமைத்து தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. கோவில்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இங்கு 2 டயாலிஸிஸ் யூனிட் உள்ளது. அதற்கான மருத்துவர்கள் இல்லை. விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததே காரணம்.
சென்னையில் சிகிச்சை அளிப்பது மாணவர்கள்
சென்னை
அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், வெளிநோயாளிகளாக தினமும் சுமார் 17 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்தே முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில்லை. அறுவை சிகிச்சைக்கு 3 மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. டாக்டர்கள் சரியாக வருவதில்லை. மருத்துவமனையில் ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகளை விரைவாக எடுக்க முடிகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
டாக்டர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் வருகையை பதிவு செய்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுகின்றனர். இதனால் இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவிலேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை திகழ்கிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வசதி இல்லாததாலும், தொடர்ந்து டயாலிசிஸ் செய்ய முடியாத நிலையாலும், ஆண்டுதோறும் 100 குழந்தைகள் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகிறது.
திருப்பூரில் பிரேத பரிசோதனைக்கும் பணம்
திருப்பூர்
அரசு தலைமை மருத்துவமனையில் குப்பை அகற்றுவதில் மெத்தனம் காட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஸ்கேன் வசதி இருந்தாலும், பலத்த காயமடைந்தவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சை என்று கூறி அனுப்பி வைக்கின்றனர். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
போதுமான கழிப்பிடம் இல்லாததால் பார்வையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் தரகர்களின் பிடியில் இம்மருத்துவமனை சிக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பிரசவ வார்டு, பிரேதப் பரிசோதனைக்கூடப் பகுதிகளில் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனைக் கட்டிடமும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை.