புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளில் எண் பொறிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய 500 மற்றும் ஆயிரம் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதில் ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்தி நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் தேவநாகிரி எண் பொறிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அச்சிடும் ரூபாய் நோட்டுகளில் பன்னாட்டு வழக்கில் உள்ள எண்களே பயன்படுத்த வேண்டும் என்ற சட்ட விதி உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வைகோ, இதுபோன்ற இந்தி மொழி திணிப்பை தீவிரப்படுத்தினால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் துணை கண்டத்தில் இந்தியா என்பதற்கு பொருள் இல்லாமல் போய்விடும் என எச்சரித்தார். எனவே மீண்டும் பழைய முறைப்படி ரூபாய் மதிப்பு எண்ணை அச்சிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.