ரூ.500, ரூ.1000 நடவடிக்கையைத் தொடர்ந்து ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தன்னிடம் ஏகப்பட்ட திட்டங்கள் இருப்பதாகவும், நாட்டை ஊழல் எனும் அச்சுறுத்தலிலிருந்து மீட்க கைவசம் நிறைய திட்டங்கள் உள்ளதாகவும், இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் மோபா கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பிறகு உரையாற்றிய போது, “இது முடிவல்ல, இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கு என் மனதில் மேலும் திட்டங்கள் உள்ளன. எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள், 50 நாட்கள் கொடுங்கள் நான் நீங்கள் விரும்பும் இந்தியாவை உங்களுக்கு அளிபேன்.
பினாமி சொத்துகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போகிறோம். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு. இந்தியாவில் மோசடி செய்து சம்பாதித்த பணம் இந்திய எல்லையை விட்டுத் தாண்டிச் செல்லுமாயின் அதனை கண்டுபிடிப்பது எங்கள் கடமை.
சில சக்திகள் எனக்கு எதிராக திரள்கின்றன என்பதை நான் அறிவேன். என்னை அவர்கள் வாழவிட மாட்டார்கள், அவர்கள் என்னை சீரழிக்கத் தயாராக உள்ளனர் காரணம் அவர்களது 70 ஆண்டுகால கொள்ளை தற்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது, ஆனால் நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன். காங்கிரஸார் என்னை எதிர்க்கின்றனர், உங்களால் 25 பைசாவைத்தான் தடை செய்ய முடியும், பெரிய நோட்டுகளை தடை செய்யும் துணிவு உங்களுக்கு கிடையாது.
இந்நாட்டு மக்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார்களோ அதைத்தான் நான் செய்கிறேன். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கறுப்புப் பணத்திற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது முதல் நான் என் பணியில் தெளிவாகவே இருந்து வருகிறேன்.
நேர்மையான குடிமக்கள் ஊழல் எனும் அச்சுறுத்தலை தோற்கடிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் மற்றும் பிற ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ரூ.4000 மாற்ற வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆனால் மக்களுக்கு நான் கூறுவதெல்லாம் இந்த இன்னல்கள் இன்னும் 50 நாட்களுக்குத்தான், ஒருமுறை சுத்தம் செய்து விட்டால் ஒரு கொசு கூட பறக்க முடியாது..
70 ஆண்டுகால நோய் இது, நான் இதனை 17 மாதங்களில் அகற்றியாக வேண்டும். நாடு விடுதலை அடைந்தது முதல் நடந்த ஊழல்களை நான் அம்பலப்படுத்துவேன். இதற்காக ஒரு லட்சம் இளைஞர்களை பணியிலமர்த்தவும் நான் தயங்க மாட்டேன், நான் அதனைச் செய்வேன்.
எனது முடியைப் பிடித்து விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் இழுக்கலாம் என்று அவர்கள் நினைத்தால் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நீங்கள் என்னை உயிரோடு எரித்தாலும் நான் அச்சப்படப் போவதில்லை.
ரூ.500, 1000 ரகசிய நடவடிக்கையை நான் 10 மாதங்களுக்கு முன்பாக சிறிய அணி ஒன்றை அமைத்துத் தொடங்கினேன். ஆனாலும் இது மனோகர் பாரிக்கர் செய்தது போன்ற ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடவடிக்கை அல்ல. நாம் இங்கு புதிய நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் இன்னும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
என்னுடைய குறிக்கோள்களில், நோக்கங்களில் உங்களுக்கு ஏதேனும் தவறு என்று பட்டால் என்னை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள். நீங்கள் விரும்பிய இந்தியாவை உங்களுக்கு நான் அளிக்கத்தான் போகிறேன். இந்த நடவடிக்கைகளினால் சாதாரண மக்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டால் நானும் அதே வலியை உணர்கிறேன். நான் அவர்கைன் இன்னல்களை புரிந்து கொள்கிறேன், ஆனால் இவையெல்லாம் 50 நாட்கள் வரைதான் 50 நாட்களுக்குப் பிறகு நாட்டை ஊழலற்ற விதமாக தூய்மைப்படுத்துவதில் வெற்றி பெறுவோம்.
கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக உறங்கினர், ஆனால் ஊழல்வாதிகளான சில லட்சம் பேர்கள் மட்டும் இந்த நடவடிக்கைகளால் தூக்க மாத்திரைகளை வாங்கச் சென்றனர்.
பல எம்.பி.க்கள் நகைகள் வாங்க பான் அட்டை கட்டாயம் என்று ஆக்கி விடாதீர்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்ததை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். ஆனால் இன்று கணவனை இழந்த தாய்மார்களை தவிக்க விட்ட சிலர் தாய் பெயரில் இன்று ரூ.2.5 லட்சம் டெபாசிட் செய்கின்றனர்.
நேர்மையாக வாழும் மக்கள் திரளின் ஆதரவில் நான் ஊழலுக்கு எதிரான இந்தப் போரை தொடங்கியுள்ளேன். இவர்களது சக்தியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, இவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அனைவரும் கூறுகின்றனர் ஆனால் நாட்டுக்கு இது பயனளிக்கும் என்று தெரிந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உப்பு பற்றாக்குறை குறித்து வதந்தி பரப்புபவரக்ள் அவர்களது கறுப்புப் பணம் பயனற்று போனதால் இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
தாமாகவே முன் வந்து வரி செலுத்தும் முறையில் ரூ.67,000 கோடி வசூலித்துள்ளோம். மேலும் பல நடவடிக்கைகள் மூலம் ரூ.125,000 கோடி வரிவசூல் செய்துள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற நான் சிறிய டோஸ்களில் மருந்துகளை அளித்து வருகிறேன்.
நான் நாற்காலிக்காக பிறக்கவில்லை, பதவி வெறி எனக்கு இல்லை. நான் என் குடும்பத்தையும், கிராமத்தையும் விட்டு நாட்டுக்காக வெளியே வந்தேன். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தில் ஏழைகளின் வேண்டுதல்களும் தாய்மார்களின் ஆசீர்வாதங்களும் எனக்கு உள்ளன. இவைதான் வெற்றிக்கான உந்துசக்தி.
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அபராதம் கட்டியாவது வங்கிகளில் செலுத்தி மையநீரோட்டப் பொருளாதாரத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்னும் சிலர் காத்திருக்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும்.
பதற்றத்தில் ரூ.500க்கு ரூ.300 மாற்றி கொள்ளாதீர்கள். இந்த நோட்டுகளை பயனிலிருந்து அகற்றியது மேலும் பயன்பெறவே. நான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏழை, நேர்மை மக்களுக்காகவே. இவர்களின் கடினமான வாழ்க்கையைப் புரிந்து கொண்டுதான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். இதன் மூலம் இவர்கள் தங்களுக்கென வீடு ஒன்றைப் பெறலாம் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கலாம். இவர்கள்து பெற்றோர்கள் மீதும் அக்கறை பிறக்கும்.
இவ்வாறு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.