திருமலை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதவை என மத்திய அரசின் அறிவிப்பால் ஏழைகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் என நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நேற்று நகரியில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்பதாக கூறி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தது. கருப்பு பணம் வைத்துள்ள குபேரன்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற அவதியுற்று வருகின்றனர். வங்கியில் பணத்தை மாற்ற குழந்தைகள், முதியவர்களுடன் கால்கடுக்க காக்கவைக்கப்படுகின்றனர். அப்படி நின்றாலும் வங்கியில் பணம் இல்லை என திருப்பி அனுப்பப்படுகின்றனர். தினக்கூலிகள், சில்லறை வியாபாரிகள், அன்றாடம் சம்பாதித்து சாப்பிடுபவர்களே கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மோடியின் இந்த திடீர் நடவடிக்கை தேர்தலில் அவருக்கு எதிராக எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.