கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால், அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கும்பலாக திரண்டுள்ளன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்துக்கு எதிராக பிரதமர் மோடி துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளார். அதற்கு தற்போது ஆதரவு பெருகி, மக்கள் இயக்கமாக மாறிவிட்டது.
இத்தகைய திடீர் அறிவிப்பால் சில சங்கடங்கள் ஏற்பட்டிருந்தாலும், மத்திய அரசின் முடிவை சராசரி மனிதன் ஆதரித்து வருகிறான். இன்னொருபக்கம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் இந்த முடிவை தடம்புரள வைப்பதற்காக பல்வேறு வதந்திகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர்.
ஆனால், கருப்புப் பணம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் பிரதமர் மோடியின் பக்கம் மக்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.
கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழித்துக்கட்ட இரவு-பகல் பார்க்காமல் மோடி பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கும்பலாக அணிதிரண்டிருக்கின்றன.
இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்துவந்தபோது, பல்வேறு ஊழல்கள் நடைபெற்று பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்தவர்கள் (சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி) எங்கிருந்தீர்கள்?
அதிக ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும், தேர்தல்களில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான ஓர் அடியை எடுத்து வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதால், தேர்தல்கள் மலிவாகும். அரசியல் நிதியும் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.