அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினாவதற்கு முட்டுக்கட்டைப் போடும் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகள் இணைவதற்கான எங்களது இரு நிபந்தனைகளை நிறைவு செய்தால் மட்டுமே, கூட்டமைப்பில் அந்த நாட்டை இணைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை. என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ப்பதில் பாகுபாடும், சிறப்புச் சலுகைகளும் காட்டப்படக்கூடாது என்பதே எங்கள் கொள்கையாகும் என்றார் அவர்.
என்எஸ்ஜி கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு முன்னர், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை இணைப்பது குறித்து அந்தக் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பரிந்துரைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் உறுப்பினராக விரும்பும் குறிப்பிட்ட நாட்டின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது குறித்தும் என்எஸ்ஜி-யின் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்
என்று சீனா வலியுறுத்தி வருகிறது.