சென்னை, சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளாக 3 பேர் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டில், 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 54 நீதிபதிகள் உள்ளனர். 24 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதி பதிகளாக பணியாற்றி வந்த ஆர்.எம்.டி.டீக்காராமன், என். சதீஷ்குமார், என்.சேஷ சாயி ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து புதிய நீதிபதிகள் 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் இன்று காலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ல் இருந்து 57 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆர். சக்திவேல், 3 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை வாசித்தார்.
பின்னர், இந்த நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்கி, தமிழக கவர்னர் பிறப்பித்த உத்தரவை வாசித்தார். அதை தொடர்ந்து, புதிய நீதிபதிகளை பதவி ஏற்க வருமாறு அவர் அழைத்தார்.புதிய நீதிபதிகள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதை தொடர்ந்து, தமிழ் நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், ஐகோர்ட்டில் உள்ள வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர், புதிய நீதிபதிகளை வர வேற்று பேசினார்கள். அதை தொடர்ந்து, புதிய நீதிபதிகள் 3 பேரும், அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.அப்போது புதிய நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பேசும்போது, விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு நல்ல ஒழுக்கத்தையும், கல்வியையும் கொடுத்த என் பெற்றோருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மாமா தர்மன், சென்னை ஐகோர்ட்டில் அரசு பிளீடராக பணியாற்றிவர். அவர் தான் என்னை வக்கீல் தொழிலுக்கு அழைத்து வந்தார். அவரை போல, எனக்கு சீனியராக இருந்து பல விஷயங்களை சொல்லிக் கொடுத்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜெ.கனகராஜூக்கும், மற்றொரு சீனியர் டி.கிருஷ்ணனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
இவரை தொடர்ந்து நீதிபதி என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
நீதிபதி என்.சதீஷ்குமார் பேசும்போது, ‘எனக்கு இப்படி ஒரு உயர்ந்த பதவியை வழங்கிய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி சத்தீஷ்குமார் அக்னி கோத்ரி மற்றும் பிற மூத்த நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். நீதபதி என்.சேஷசாயி பேசும்போது, ‘நான் சட்டக் கல்லூரியில் படித்த போது என் தந்தை வி. நாராயணன் இறந்து விட்டார். அவர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றும் போது, அவர் இறந்தார். கடைசியாக அந்த பதவியைத்தான் அவர் வகித்தார்.அதேபோல, நானும் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்து, தற்போது நான் ஐகோர்ட்டு வந்துள்ளேன். இது எனக்கு இறைவன் அளித்த பாக்கியமாக கருதுகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
Summary: Madras High Court, the 3 new judges were sworn in today. Chief Justice Sanjay Kishan Kaul had sworn to them. Madras High Court, there are 75 vacancies for judge. It currently has 54 judges. 24 judge were vacant.