கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனியார் வன பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென, பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், அந்த சட்டத்தால் மக்கள் என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....
தமிழகத்தில் தனியார் வனபாதுகாப்புச் சட்டம் 1972-ம் ஆண்டு, முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் தங்கள் பட்டா நிலத்தில் பயிரிடவோ, சொந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் இந்த சட்டத்தால், குமரி மாவட்டத்தில் உள்ள மலையோர கிராம மக்கள் மற்றும் மலையோர பகுதிகளில் விளை நிலங்கள் வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பெண்களின் திருமணச் செலவு போன்றவற்றிற்காக, நிலங்களை விற்க முடியாமல் பெரும் துயரங்களை சந்திக்கின்றனர்.
ஏற்கனவே, வன விலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்திவரும் நிலையில், புலிகள் சரணாலயம் மற்றும் சூழியல் பாதுகாப்பு வளையம் போன்ற திட்டங்களை அமுல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருவதால், மலையோர மக்களின் அச்சம் மேலும் அதிகமாகியுள்ளது. தனியார் வன பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடைபெற்ற பின்னரும், விடிவு பிறக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் வனபாதுகாப்புச் சட்டத்தினால், மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பலமுறை சட்டமன்றத்தில் பேசி உள்ளதாகவும், இந்த சட்டத்தை ரத்துசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தனியார் வனபாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், அந்த சட்டத்தை தளர்த்தினால் மட்டுமே, இழந்த தங்களின் பொருளாதாரத்தை மீட்க முடியும் என கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary:
Implemented in Kanyakumari district to cancel the Private Forest Protection Act, the public have continued to fight. In this case, the law describes how the people of this news .... What are the difficulties facing