அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சனிக்கிழமை தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
58 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பெற்றுவந்த தீவிர சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ள இரண்டாவது தளத்திலேயே சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறை உள்ளது. சுவாசச் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மற்றும் அவசரச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும், மருந்துகள், மற்றும் மருத்துவக் கருவிகளும் இந்த அறையில் உள்ளதாக முதுநிலை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஆடிப்பாடி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
மருத்துவமனையில் அனுமதி: காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள் குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அதனையடுத்து உயர் சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 நிபுணர் குழுவினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சில அறிவுரைகளை வழங்கினர்.
அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாசத்தை சீராக்குவதற்காக அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவைச் சிகிச்சை (டிரக்யாஸ்டமி) செய்யப்பட்டு குழாய் பொருத்தப்பட்டது.
சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சிங்கப்பூர் நிபுணர்கள்: மேலும் இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பெண் நிபுணர்கள் மருத்துவமனைக்கு அக்டோபர் 15-ஆம் தேதி வரவழைக்கப்பட்டனர்.
உடல் நலனில் முன்னேற்றம்: இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, முதல்வர் பூரண நலத்துடன் இருக்கிறார். வீடு திரும்பும் நாளை முதல்வரே முடிவு செய்வார். சுவாசிப்பதற்கு ஏதுவாக நுரையீரல் நன்கு விரிவடையும் வகையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வென்டிலேட்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது. பிற நேரங்களில் முதல்வர் தாமாகவே சுவாசிக்கிறார்.
நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் விரைவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார் என்று தெரிவித்தார்.
தனி அறைக்கு மாற்றம்: இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில், அவர் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த 2-ஆம் தளத்திலுள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அப்பல்லோ நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் கூறியது:
முதல்வர் படிப்படியாக குணமடைந்து வருகிறார் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தோம். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதால், அவருக்கு இன்னும் 4 அல்லது 5 நாள்கள் ஓய்வு தேவைப்படும். அதன் பின்பு தேவையான நடைமுறைகளை மருத்துவமனை மேற்கொள்ளும் என்றார்.
தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ள முதல்வருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான கருவிகள் யாவும் அந்த அறையில் நிறுவப்பட்டுள்ளன. சிகிச்சை முடிந்து அவர் இம்மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இதுவரை...
செப். 22
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அக். 15
இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து 2 பெண் இயன்முறை மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அக். 20
முதல்வர் குணமடைந்து வருவதாகவும் அவர் உரையாடுவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அக். 22
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக முதல்வர் சிகிச்சை பெறும் அறையில் சென்று பார்த்ததாகவும் அவர் விரைவில் பூரண குணமடைவார் என்றும் தெரிவித்தார்.
நவ. 4
முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். வீடு திரும்பும் நாளை முதல்வரே முடிவு செய்வார் என அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
நவ. 12
முதல்வர் திடகாத்திரமாக உள்ளார் என டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
நவ. 13
மக்களின் பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியீடு.
நவ. 19
முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
சுட்டுரையில் அறிவிப்பு
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரை கணக்கிலும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு சனிக்கிழமை மாலை மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் தொண்டர்கள்
முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்ட செய்தி அறிந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இனிப்பு வழங்கியும், ஆடிப்பாடியும், கோஷங்களை எழுப்பியும் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
English Summary : Chief Minister Jayalalithaa separate room Change.Chief Minister Jayalalithaa, who is receiving treatment at Apollo Hospital, intensive care unit, was transferred from a Saturday to a separate room. After 58 days of therapy, after an improvement in his condition, was transferred to a separate room with special facilities.