பாக்கெட், பாக்கெட்டாக 5, 10 ரூபாய் நாணயங்கள் அளிக்கப்படுவதால், அதனை வேறுவழியின்றி பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை முதல் இந்த ரூபாய் நோட்டுகளை அவர்கள் மாற்றி வருகின்றனர். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக புதிய 2 ஆயிரம், நூறு, 20, 10 ரூபாய் நோட்டு கட்டுகளை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். நாளொன்றுக்கு சுமார் 500 பேர் வரை வரிசையில் நின்று இவ்வாறு சில்லறை பணம் வாங்கிச் சென்றனர்.
திடீர் முடிவு: ரிசர்வ் வங்கியில் யார் வேண்டுமானாலும் செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைக் கொண்டு வந்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே, பலரும் நோட்டுகளை மாற்றி சென்றுவந்தனர்.
இந்த நிலையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை செவ்வாய்க்கிழமை எடுத்து வந்த பொது மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவர் ரூ.4,500 வரை செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில், செவ்வாய்க்கிழமையன்று செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்த பொது மக்களுக்கு ஒரு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும், மீதமுள்ள 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு 5 அல்லது 10 ரூபாய் நாணயங்கள் அடங்கிய பாக்கெட்டுகளும் அளிக்கப்பட்டன.
நாணயங்கள் அடங்கிய பாக்கெட்டுகளை பெற்றுக் கொண்ட பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கடைகளில் பொருள்களை வாங்கும் போது அதற்கான உரிய தொகையை பணமாகத்தான் செலுத்த முடியும். ஆனால், சில்லறை பாக்கெட்டுகளை எப்படிப் பயன்படுத்த முடியும்? ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் எப்படி நாணயங்களாக எண்ணி எண்ணி கொடுக்க முடியும் என்று தெரியவில்லை என்றனர்.
நீண்ட வரிசை: செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் பொது மக்கள் ஒருபுறம் ரிசர்வ் வங்கிக்குச் செல்கின்றனர். மேலும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடனும் மக்கள் படையெடுக்கின்றனர். வேறு எங்கும் சில்லறை இல்லாத சூழ்நிலையில், நாணயங்களாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.