நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற வனத் துறையினரை கண்டித்து, தோடர் இன மக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பைக்காரா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை, தோடர் இன மக்கள் சிலர் ஆக்கிரமித்து, காய்கறி சாகுபடி செய்துள்ளனர். இதனால் அந்த நிலத்தை மீட்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வனத்துறையினர், ஆக்கிரமிப்பு நிலத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலியை அகற்ற முயன்றனர்.
அப்போது, அங்கு சென்ற தோடர் இன மக்கள், வனத் துறையினர் மற்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனத் துறையினர் தொடர்ந்து வேலியை அகற்றும் பணியை மேற்கொண்டதால், ஆத்திரத்தில், தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தோடர் இன மக்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வனத் துறையினர் மற்றும் போலீஸார், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அந்த இடத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகளை அறுவடை செய்த பிறகு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென கால அவகாசம் வழங்கி திரும்பிச் சென்றனர்.