பெங்களூரு: கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் இரட்டை குழாய் திட்டம் அமைப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.ஏறக்குறைய, 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடங்கள், 20க்கு மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட அடுக்கு மாடி கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்கள்; 5,000 மற்றும், 1,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட டவுன் ஷிப்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் இரட்டை குழாய் திட்டம் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை டாய்லெட் மற்றும் இதர காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.இத்திட்டம் குடியிருப்பு பகுதிகளில் அமல்படுத்தப்படவில்லை எனில், முதல் மூன்று மாதங்கள் வரை குடிநீர் கட்டணத்தில், 25 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.அதன் பின்னும் அமல்படுத்தவில்லை என்றால், அபராதம் இரு மடங்காக வசூலிக்கப்படும். குடியிருப்பு அல்லாத கட்டடங்களில் முதல், மூன்று மாதங்கள் வரை, 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, பின், 100 சதவீதமாக வசூலிக்கப்படும்.இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.நவம்பர் 14 : குடிநீர் வாரியம், 'ரஜதபவன்' எட்டாவது மெயின், 19வது கிராஸ், மல்லேஸ்வரம் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், வடக்கு, வடகிழக்கு, மத்திய டிவிஷன் பகுதியினர் பங்கேற்கலாம்.நவம்பர் 16: மேற்கு, வடமேற்கு - 1, வடமேற்கு - 2, டிவிஷன் பகுதியினர் பங்கேற்கும் வகையில், 507, கார்ட் ரோடு, குடியிருப்போர் சங்க கட்டடம், எம்.சி.லே - அவுட் ஆபீஸ் ரோடு, ராஜாஜிநகரில் கூட்டம் நடக்கிறது. நவம்பர் 19 : தெற்கு, தென் மேற்கு டிவிஷன் பகுதியினருக்காக, விஸ்வேஸ்வரய்யா மழைநீர் சேகரிப்பு கருத்து பூங்கா, எட்டாவது மெயின், 40வது கிராஸ், ஐந்தாவது பிளாக், ஜெயநகரில் நடத்தப்படுகிறது.
மூன்று நாட்களிலும் காலை, 10:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.