உலகத்தில் உள்ள பல ஆயிரம் மொழிகளில், 700க்கும் மேற்பட்ட மொழிகளில் தான் பேசவும், எழுதவும் முடியும். அதிலும் சொந்தவரி வடிவத்தில் எழுதப்படும் மொழிகள் சில நுாறு மட்டும் தான்.
இவற்றில் மிகப்பழமையான கூறுகளைக் கொண்ட தலைமை மொழிகளாக தமிழ், சீனம், எரபியோம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளைத்தான் அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழின் பண்டைய காலம், கி.மு., 700 முதல் கி.மு., 200 எனவும், மத்திய காலம் கி.மு., 200 முதல் கி.பி.,1500 எனவும், நவீன காலம் கி.பி., 1500 முதல் இன்றுவரையும் என்கின்றனர் மொழியியலார்.
இத்தனை சிறப்புள்ள நம் தமிழை ஆரம்ப காலத்தில் முன்னோர்கள் எப்படி எழுதினர் என்பதை விளக்கும் அட்டவணை பழநியில் உள்ளது.
அப்படியா... என ஆச்சரியப்படுவோர், பழநி அடிவாரம் சன்னிதி வீதியிலுள்ள அரசு மியூசியத்திற்கு வரலாம்.அங்கு தகவல் பலகையில் அழகாக தொகுத்து வைத்துள்ளதை சிறியோர் முதல் பெரியோர் வரை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில், கி.மு., 3ம் நுாற்றாண்டு முதல் கி.பி., 20ம் நுாற்றாண்டு வரை ஒவ்வொரு நுாற்றாண்டிலும் தமிழின் உயிர், மெய் எழுத்து வடிவங்களை முன்னோர் எவ்வாறு பயன்படுத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகை எழுத்துகளை மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகள், பழங்கால காசுகள், பானை ஓடுகள் மீது பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காண முடிகிறது.
நம் பாட்டன் காலத்து பழந்தமிழின் வரிவடிவ எழுத்துகள் பலவித வடிவங்களில் நம்மை வியப்புக்குள்ளாக்கும். இத்தனை வடிவங்கள் வேறெந்த மொழியிலும் இல்லையெனும் போது நம் பாட்டன்களின் மொழி, இலக்கிய அறிவை நாம் மெச்சாமல் கிளம்ப முடியாது.
இதை, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணம், பெரியவர் ரூ.5, சிறியவர் ரூ.3, வெளிநாட்டவர் எனில் ரூ.100. பள்ளி மாணவர்களோ இலவசமாக பார்வையிடலாம்.
ஒவ்வொரு வெள்ளி, இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை தினம். இதுதொடர்பாக விபரம் பெற:
04545- 241 990ல் தொடர்பு கொள்ளலாம்.
English Summary:
Several thousand languages in the world, in over 700 languages to speak, to be able to write. Particularly in the form of written languages, some own shape of written languages are hundred only.