
ஊடுருவிய ஹேக்கர்கள் :
'ஹேக்கர்கள்' எனப்படும், இணையதளங்களில் ஊடுருவி, அதன் தகவல்களை திருடுபவர்கள், இந்திய துாதரகங்களின் இணையதளத்தில் ஊடுருவி, தகவல்களை திருடியுள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இவ்வாறு திருடிய அந்த தகவல்களை, வேறொரு இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாக, 'டுவிட்டர்' சமூகதளத்தில், அந்த ஹேக்கர்கள் கூறியுள்ளனர்.
7 நாடுகளில்:
கபுட்ஸ்கி, காசிமீர்ஸ் என்ற பெயருள்ள அந்த ஹேக்கர்கள், இது குறித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:தென்னாப்ரிக்கா, லிபியா, மாலாவி, மாலி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ள, இந்திய துாதரகங்களின் இணையதளத்தை ஹேக்கிங் செய்து, அந்த தகவலை வேறொரு இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.
பாதுகாப்பு இல்லை :
இந்திய துாதரகங்களின் இணையதளங்கள் பாதுகாப்பானதாக இல்லை என்பதை நிரூபிக்கவே, இதை செய்துள்ளோம். நாங்கள் திருடியுள்ள தகவல்களில் ஒரு சிலவற்றை மட்டுமே, தற்போது வெளியிட்டுள்ளோம். இதே போன்ற நிலையில் தான், பெரும்பாலான இந்திய துாதரகங்களின் இணையதளங்கள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தகவல்கள் திருட்டு:
நெதர்லாந்தைச் சேர்ந்த இவர்கள், இந்திய துாதரகங்களின் பணியாற்றும் அதிகாரிகளின் பாஸ்போர்ட் எண்கள், இ - மெயில் விபரங்கள், ரகசிய குறியீடு உட்பட, பல்வேறு தகவல்களை திருடியுள்ளனர். அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியர்களின் விபரங்களையும் திருடியுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், வெளியுறவுத் துறை, இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.