
2014ல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிந்தன் ஃபாலி நரிமன் ஆகியோர் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என வாதிட்டார். 2008ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதம் சார்ந்து விழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் வாதிட்டார்.
ஜல்லிக்கட்டு சமூக, கலாச்சார, மதத்துடன் தொடர்புடையது என்றும், காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டி மதம் சார்ந்தது கிடையாது என்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்த சட்டரீதியாக அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிந்தன் ஃபாலி நரிமன், தமிழக அரசின் சட்டம், மிருகவதை
தடுப்பு சட்டத்துடன் முரண்படுவதாகவும் கூறினார்.