தமிழகத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல மாவட்டங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் உப்பை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உப்பு கிடைக்காது என்று வதந்தி பரவியதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு கிலோ உப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுதாக அறிந்த மக்கள்,போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாத் ரெட்டி, வதந்தி பரப்புவோர் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உப்பு விலை நாளை முதல் ரூ 250 ஆக உயரும் என பரவிய வதந்தியின் காரணமாக, மளிகைக் கடைகளில் மூட்டை மூட்டையாக பொது மக்கள் உப்பை வாங்கி சென்றனர். எனினும், உப்பின் விலையை உயர்த்தவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிபேட்டை அத்தனுர் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிக்கும் என வதந்தி பரவியதால், அப்பகுதி மக்கள் மூட்டை மூட்டையாக உப்பை வாங்கி சென்றனர். இதனால், அங்கு ஒரு கிலோ உப்பு 50 ரூபாய்க்கு விற்கபட்டது. இதுகுறித்து ராசிபுரம் வட்டாட்சியர் சந்திமாதவன், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவியுள்ள செய்தி வெறும் வதந்தி என்றும், எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தி காரணமாக அப்பகுதி மக்கள், போட்டிப்போட்டு கொண்டு வாங்கி சென்றதால் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ உப்பின் விலை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேட்டூர் ஜலகண்டபுரம் பகுதியில் 90 ரூபாய்க்கு விற்கவேண்டிய ஒரு மூட்டை உப்பு, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உப்பின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என வதந்தி பரவியது.இதனால் பொதுமக்கள் மளிகைகடைகளில் முற்றுகையிட்டு, மூட்டை மூட்டையாக உப்பை வாங்கி சென்றதால் அப்பகுதியில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுபோன்ற வதந்திகளை தடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உப்பு விலை அதிகரிக்க உள்ளதாக பரவிய வதந்தியை தொடர்ந்து மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி உப்பை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே உப்பு விலை அதிகரிக்க உள்ளதாக சமூக விரோதிகள் பரப்பிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.