மதுரை: சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரினால் ரத்தான அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பரிசீலனையும் முடிந்து விட்டது.
3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர்கட்சி என 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. வேட்புமனு பரிசீலனைக்குப்பிறகு தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனு பரிசீலனையில் 3 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 48 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இவற்றில் சுயேச்சைகளின் வேட்புமனுக்களும் அடக்கம். ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுவை வாபஸ்பெற வரும் 5ஆம் தேதி இறுதி நாளாகும். தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதியும் அதிமுக வேட்பாளராக ரெங்கசாமியும் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக கே.சி.பழனிச்சாமியும் அதிமுக வேட்பாளராக
செந்தில்பாலாஜியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸும் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரது மனுக்களும் பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது.
இடைத்தேர்தல் களம் வேட்புமனுக்களை தாக்கல் செய்த கையோடு பிரச்சாரமும் களை கட்டிவிட்டது. அதிமுக, திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழு பொருப்பாளர்கள் என இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. டீக்கடை, பெட்டிக்கடைகளில் 500, 1000 ரூபாய் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்து விட்டது. கொட்டும் மழையில் பிரச்சாரம் கொட்டும் மழையிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் வேட்பாளர்கள். ஒருபக்கம் வருணபகவானின் கருணையினால் மழை பெய்ய மறுபக்கம் வேட்பாளர்களின் கருணையினால் பணமழை கொட்டுகிறதாம்.
ஒரு ஓட்டுக்கு இத்தனை ஆயிரம் என்று மாறி மாறி பேரம் பேசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்னதான் பணப்பட்டுவாடாவை தடுக்க பல டோல்கேட்டுகளை போட்டு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தாலும் கைக்கும் கைக்கும் இடையே யாருக்கும் தெரியாமல் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதாம். தஞ்சை வைத்திலிங்கம் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி, வடக்கு மாவட்டசெயலாளராக இருந்த போதும், வைத்திலிங்கம்தான் தஞ்சையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்.
எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என்று முடிவோடு தன் முழு பலத்தையும் இறக்கியிருக்கிறாராம் ரெங்கசாமி. அதே பலத்தோடு திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியும் களமிறக்கியிருக்கிறாராம். இந்த தொகுதியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்பது திமுகவின் கவுரவப் பிரச்சினை என்பதால் முழு வீச்சில் வைட்டமின் 'ப' வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறதாம். அரவக்குறிச்சியில் இணைந்த கைகள் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், விஜயபாஸ்கரும் இணைந்த கைகளாக மாறி வாக்கு சேகரித்து வருவதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்பது செந்தில் பாலாஜியின் டார்க்கெட் இதற்கான வழிமுறைகளை கரெக்டாக கடைபிடித்து பிரச்சாரம் செய்கிறாராம்.
திமுவின் டெக்னிக் திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியின் பிரச்சார டெக்னிக் வேறு மாதிரி இருக்கிறதாம். அரவக்குறிச்சி தேர்தல் பொறுப்பாளராக உள்ள ஏ.வ. வேலு, ஓடி ஓடி வேலை செய்கிறாராம். ஆனால் செலவு செய்து களைத்துப் போன கே.சி.பழனிச்சாமி, இம்முறை பணத்தை பதுக்கியே வைத்திருப்பதால் தொண்டர்கள் சற்றே சோர்வடைந்திருக்கிறார்களாம். திருப்பரங்குன்றம் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் கொட்டும் மழையிலும் தீவிர பிரச்சாரம் செய்தார்.
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறி அவர் வாக்குச்சேகரித்தார். கட்சிக்கு அவர் புதியவர் என்பதால் செலவுதான் பல கோடிகளை தாண்டுகிறதாம். ஆனாலும் சளைக்காமல் பணத்தை களமிறக்குகிறாராம். அதிமுகவின் ஏ.கே.போஸ் அதிமுகவின் ஏ.கே. போஸ், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை தனியாக கவனிப்பதோடு, வாக்களர்களையும் வகையாக கவனித்து வருகிறாராம். 'திருமங்கலம் பார்முலா' மறைந்து 'திருப்பரங்குன்றம் பார்முலா' என்ற சொல் இடைத்தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.
எது எப்படியோ? அதிமுகவிலும், திமுகவிலும் எதிரிகள் வெளியில் இல்லை, கட்சிக்கு உள்ளேயாதான் இருக்கின்றனர் என்பதால் உள்குத்து ஜெயிக்குமா? வேட்பாளர்கள் ஜெயிப்பார்களா என்பது நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தெரியும்.
Friday, 4 November 2016
Home »
» கொட்டும் மழையில் வேட்பாளர்கள் பிரச்சாரம்... பணமழையில் நனையும் வாக்காளர்கள்