தில்லியில் அகில இந்திய வானொலி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆகாசவாணி வருடாந்திர விருதுகளை அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
அகில இந்திய வானொலியானது இயற்கைச் சீற்றம், சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் உள்பட அனைத்து சிரமங்களையும் கடந்து இடைவிடாது பணியாற்றி வந்துள்ளது. நாட்டின் கலாசார மற்றும் ஆன்மிக மரபு என்பது மிகப்பெரிய சொத்தாகும். இதற்காகவே ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நோக்குகிறது. இந்தப் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும்.
ஒரு புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கான திட்டம் குறித்து என்னிடம் பேச வருவோரிடம் உண்மையான செய்திகளை வெளியிடுமாறும், பரபரப்புக்காக செய்தி வெளியிட வேண்டாம் என்றும் நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். ஆனால், பொதுவாக அதற்கு மாறாகத்தான் நடக்கிறது.
எனினும், இந்த விஷயத்தில் அகில இந்திய வானொலி விதிவிலக்காக உள்ளது.
செய்திகளுடன் தங்களது கருத்துகளையும் சேர்த்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாக வைத்துள்ளன. இது முறையல்ல.
ஆனால் பலருக்கும் இதுவே வாடிக்கையாகி விட்டது. தொலைக்காட்சிகளில் தங்கள் கருத்துகளை பார்வையாளர்கள் மீது திணிக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் செய்தி என்பது செய்தியாகவே இருக்க வேண்டுமே தவிர கருத்துத் திணிப்பு கலந்திருக்கக் கூடாது.
கிடைத்த தகவலை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுவதே ஊழலுக்கும், மற்ற தீமைகளுக்கும் எதிரான ஆயுதமாக இருக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்த நிகழ்ச்சியில் தகவல்-ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர், பிரஸார் பாரதி அமைப்பின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.