புதுடில்லி: கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இந்தியாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக எடுக்கப்பட்டுள்ள பல அதிரடி முடிவுகள் குறித்து, பிரதமர் அறிவித்தார். அதன் படி, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.இதனையடுத்து மக்கள் பலர் டெபிட், கிரடிட் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யத்துவங்கியுள்ளனர்.
ரூ.500,1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, டெபிட், கிரடிட் கார்டுகள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், சிறிய தொகைக்கும் கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வணிக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும். இதனால் ரூ.100 நோட்டுகளுக்கான தேவையை குறைக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.