மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் குவிந்தன. இதனிடையே, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் நேற்று வங்கிக் கிளைகளை முற்றுகையிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவி ஆகியவற்றைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதேநேரம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் 2 நாட்களுக்கு பழைய நோட்டுகள் பெறப்படும் என அறிவித்தார். இதனால் பெரும்பாலானோர் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டதால் அங்கும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமலும், ஓட்டலில் சாப்பிட முடியாமலும் திண்டாடினர்.
இதனிடையே, நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1,000 பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கென ஒரு படிவம் தரப்பட்டது. அதை நிரப்பி அதனுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் காலையிலேயே பொதுமக்கள் வங்கிகள், அஞ்சலகங்களை முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர்.
மேலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சில வங்கிகள், அஞ்சலகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில வங்கிகளில் ஒருசில மணி நேரங்களிலேயே புதிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன.
பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒவ்வொருவரும் தலா ரூ.4,000 வரை மட்டுமே புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், சில வங்கிக் களைகளில் ரூ.2000 மட்டுமே வழங்கப்பட்டதாக மக்கள் புகார் கூறினர். அதேநேரம், பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.