மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
தமிழகம் வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நெல்லையில் பாரதியார் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் நகைக்கடைகள் 24 மணி நேரம் இயங்கியதாகக் கூறினார்.
கறுப்புப் பணம் தங்கமாக மாற்றப்பட்டதற்கு இது அடையாளம் என அவர் கூறினார். ரூபாய் நோட்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றம் கறுப்பு பணத்தை ஒழிக்க எந்தவிதத்திலும் உதவாது எனத் தெரிவித்த யெச்சூரி, வரும் புதன்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு விவாதத்தையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.