புதுடில்லி: ''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில் இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம் தன் கடமையை செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நேற்று முன்தினம் அறிவித்தார்; அவற்றை, வங்கியில் டிசம்பர், 30க்குள் 'டிபாசிட்' செய்யலாம் என அறிவிக்கப் பட்டது. இந்த பணத்துக்கு வரிவிதிக்கப்படுமா என்பது குறித்து, பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துார்தர்ஷன், செய்தி சேனலில் கூறியதாவது: செல்லாதென அறிவிக்கப்பட்ட
கரன்சி நோட்டுகள், வரிவிதிப்பில் இருந்து தப்பாது. அவற்றின் வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம் தன் கடமையை செய்யும். வங்கிகளில், 'டிபாசிட் 'செய்யப்படும் பணம், இதற்கு முன் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, சட்டரீதியில் பெறப்பட்டிருந்தாலோ, அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
அதேசமயம், சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்தி ருந்தால், அந்த பணம் வந்ததற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். அந்த பணம், சட்டவிரோதமாக வோ, லஞ்சம் வாங்கியோ பெறப்பட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டு செலவினங்களுக்காக வைத்திருக்கும், 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் ரூபாய் போன்ற சிறிய தொகை பற்றி, பொதுமக்கள் கவலைப்படத் தேவை யில்லை. அவற்றை, கவலைப்படாமல் வங்கிகளில், 'டிபாசிட்' செய்யலாம். முதல் இரு வாரங்களில், குறைந்தளவே, புதிய கரன்சி சப்ளை செய்யப் படும்; எனவே, செல்லாத கரன்சிகளுக்கு பதில், புதிய கரன்சிகளை மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மூன்று வாரங்களுக்கு பின், அதிகளவில் கரன்சி சப்ளை செய்யப்படுவதால், பிரச்னை இருக்காது.
மத்திய அரசின் நடவடிக்கையால், மின்னணு வியல் முறையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும். இதன் பின், ஊழல் செய்வோர், லஞ்சம் வாங்கு வோர், குற்ற செயல்களால் பணம் குவிப்போர் சிரமப்படுவர். இதனால், நேர்மை அதிகரிக்கும்.
அரசின் நடவடிக்கையால் முதல் இரு நாட்களுக்கு, பொதுமக்கள் சிரமப்படுவர் என்பது உண்மையே.
அதற்காக, கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கா மல் இருக்க முடியாது. இதனால், அரசுக்கு, நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.