இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லினும், அவரது மனைவியும் 8 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகை தந்தனர்.
இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ள அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ரிவ்லின் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, விவசாயம், நீர் வளங்கள் மற்றும் இணையவழிக் குற்றங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ரிவ்லினுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றால் அமைதியை விரும்பும் அனைத்து நாட்டு மக்களும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்துக்கு எல்லைகள் இல்லை: பயங்கரவாதம் ஓர் உலகளாவிய பிரச்னை என்பதையும் அதற்கு எல்லைகளே இல்லை என்பதையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொள்கிறோம்.
பயங்கரவாதிகளுக்கு, நாசவேலைகள் புரியும் மற்ற அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. எனவே பயங்கரவாதத்தை திறமையாக எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு அளிப்பது என்று ஒப்புக் கொண்டுள்ளோம். குறிப்பாக இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்தும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
துரதிருஷ்டவசமாக, பயங்கரவாதம் உருவாகும் நாடுகளில் ஒரு நாடானது, இந்தியாவின் அண்டை நாடாக (பாகிஸ்தான்) உள்ளது.
பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதை வளர்க்கும் நாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காப்பதால் பயங்கரவாதிகள் மேலும் ஊக்குவிக்கப்படுவர்.
ரிவ்லினின் இந்திய வருகை, இரு தரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இஸ்ரேல் அளித்து வரும் ஆதரவுக்கு இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது என்று மோடி அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்து செயலாற்றும்: பின்னர், இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லின் கூறியதாவது:
பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது. அதை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு எங்கள் நாடு பக்கபலமாக இருக்கும்.
எங்கள் மக்கள் மற்றும் அவர்களின் மதிப்புகளை பாதுகாக்க இருநாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், டிஜிட்டல் இந்தியா மற்றும் பொலிவுறு நகரங்கள் திட்டங்கள் ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற இஸ்ரேல் தயாராக உள்ளது.
இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வருகை தருவார் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இதைத் தொடர்ந்து விவசாயம் மற்றும் நீர் வள மேலாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 2 ஒப்பந்தங்கள் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின.