இந்தியா-ஜப்பான் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை ஜப்பான் அரசு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கிறது. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே, ஜப்பானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள முதல் நாடு இந்தியா ஆகும்.
இந்த நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை இந்தியா மீறினால், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு ஜப்பானுக்கு அதிகாரம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான் என்பதால், அணுசக்தி விஷயத்தை அந்த நாடு மிகவும் எச்சரிக்கையுடன் கையாள்கிறது. எனவே, அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு விருப்பம் தெரிவித்தது.
இந்தியா அணு ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டால் அந்த ஒப்பந்தத்தை ஜப்பான் முறித்துக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா கடந்த 2008-ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்திருந்தது. அதை, அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது சுட்டிக் காட்டிய ஜப்பான் தரப்பினர், அந்த அம்சத்தையும் ஒப்பந்தத்தில் பதிவு செய்தனர். எனினும், ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதற்கான சூழல் எதுவென்று ஒப்பந்தத்தில் முழுமையாக வரையறுக்கப்படவில்லை.
இதற்கு முன் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைப் போலவே ஜப்பான் அரசுடனும் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில், இந்தியா அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொள்ளுமானால், அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக, இரு நாடுகளும் உடனடியாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதுவரை ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.