
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான எந்த முயற்சியையும் இன்னும் மத்திய அரசு செய்யவில்லை. இதனால் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, சாலைமறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா என தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை 10 மணியளவில் வாடிப்பட்டி அருகில் தனிச்சியம் பிரிவில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக் கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கோரியும் போராட்டக்காரர்கள் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
அப்போது, அந்தப்பக்கம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். போராட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த போக்குவரத்து நெரிசலில் அமைச்சரின் காரும் சிக்கியது. இதனால் உஷாரான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி மாற்று வழியில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.
இதனிடையே வாடிப்பட்டி போலீசார், போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேப் போன்று மதுரை அவனியாபுரம் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.
English summary:
Jallikattu supporters staged a protest demanding to left ban in Madurai.